ETV Bharat / bharat

'ரூ.15 கட்டணத்தில் மோர்பியில் முழு குடும்பத்தையும் இழந்தேன்':பாதிக்கப்பட்டவர்கள் உருக்கம்

author img

By

Published : Nov 1, 2022, 6:01 PM IST

தொங்கு பாலம் இடிந்த விபத்துக்கு மோர்பி நகராட்சியும், குஜராத் மாநில அரசும்தான் பொறுப்பு என குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் குற்றம்சாட்டினர். மோர்பி நகராட்சிக்கு தெரிந்தே இந்தச்சம்பவம் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

Morbi
Morbi

மோர்பி: குஜராத் மாநிலத்தின் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக 9 பேரைக் கைது செய்து சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விபத்தில் தங்களது குடும்பத்தினரை இழந்தவர்கள், அந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணீரில் மூழ்கி உள்ளனர். அவர்கள் மோர்பி நகராட்சி மீதும், குஜராத் அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பால விபத்தில் மீரா(19) என்ற இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக மீராவின் குடும்பத்தைச்சேர்ந்த இம்ரான் சயத் கூறுகையில், "எங்களது வீட்டில் அன்று(அக்.30) ஒரு பிரமாண்ட நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு குடும்பத்தின் மற்றொரு பெண்ணான மீராவின் திருமணம் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். சில மாதங்களுக்குப்பிறகு, மீராவுக்கு திருமணம் செய்ய வேண்டும் என நாங்கள் பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில், அவளை சடலமாக பார்க்க நேரிடும் என்று நாங்கள் நினைத்துப்பார்க்கவில்லை.

இந்த விபத்தில் நாங்கள் பறிகொடுத்த ஆறு பேரில் இருவர் சிறிய குழந்தைகள். நான்கு பேர் பெரியவர்கள். மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர். குழந்தைகள் பலர் காயமடைந்துள்ளனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலையில் மோர்பி பாலத்தைப் பார்வையிட அவர்கள் சென்றார்கள். அப்போதுதான் இந்த பெரும் இழப்பு ஏற்பட்டது" என்று கூறினார்.

பாலம் இடிந்தது குறித்துப் பேசிய இம்ரான், "100 முதல் 150 பேர் செல்லக்கூடிய பாலத்தில், 500 பேரை அனுமதித்தால், வேறு என்ன நடக்கும்? இதுபோன்ற ஆபத்து உள்ளது எனத்தெரிந்துதான் அவர்கள் மக்களை அனுமதித்துள்ளார்கள். இது வேண்டுமென்றே செய்தது போல இருக்கிறது. இப்போது நாங்கள் என்ன செய்வது? இறந்தவர்களை மீட்டு வர முடியுமா? எனது குடும்பத்தினர் இறப்புக்கு நீதி வேண்டும்.

இதற்கு யார் பொறுப்பு என்று எங்களுக்குத்தெரியவில்லை. அரசாங்கம் அதைக்கண்டுபிடிக்க வேண்டும். எங்களுக்குத்தெரிந்ததெல்லாம் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான்" என்று இம்ரான் ஆத்திரத்துடன் கூறினார்.

இந்த பாலத்தின் ஒப்பந்தத்தை பாலம் அல்லது கட்டுமானப்பணிகளில் அனுபவம் இல்லாத ஓரேவா நிறுவனத்திற்கு மோர்பி நகராட்சி கொடுத்துள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளதாக பால விபத்தில் உயிரிழந்த மற்றொரு இளம்பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

"இதில் ஊழல் நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. மோர்பி நகராட்சி கூட்டு சேர்ந்து, திறமையற்ற நிறுவனத்திற்கு பால ஒப்பந்தத்தை வழங்கியது. பின்விளைவுகளை முழுமையாக அறிந்தே இதனை செய்துள்ளனர். ஓரேவா நிறுவனத்திற்கு நிபுணத்துவம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

மத்தியில் மோடி அரசு ஆட்சியில் உள்ளது. அவர்களின் சொந்த மாநிலத்தில் இதுபோன்ற அலட்சியமான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு மோர்பி நகராட்சியும், மாநில அரசும்தான் முழுப்பொறுப்பு. பாலம் திறக்கப்பட்டது தங்களுக்குத் தெரியாது என்று கூறுவது என்ன மாதிரியான நிர்வாகம்?" என்று கேட்டனர்.

இதேபோல் தனது குழந்தை, மனைவி மற்றும் தாயை இழந்த ஆசிஃப், இந்த விபத்தால் தனது வாழ்க்கையில் இருந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பறிபோய்விட்டதாக வேதனைத் தெரிவித்தார்.

"என்னிடம் இரண்டு வயது குழந்தை உள்ளது, அந்த குழந்தை தனது தாயும் பாட்டியும் எங்கே என்று கேட்கிறது, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனது முழு குடும்பமும் அழிந்துவிட்டது" என்று ஆசிஃப் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "அவர்கள் தங்களுக்கு வேண்டியதை விட அதிக டிக்கெட்டுகளை விற்றார்கள். பாலத்தால் இவ்வளவு எடையை தாங்க முடியாது என்று அவர்களுக்குத்தெரியும். இருந்தும் அவர்கள் பலரை உள்ளே அனுமதித்தார்கள். பாலம் 15 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்று விளம்பரங்கள் செய்யப்பட்ட நிலையில், அது 15 நாட்கள் கூட தாங்கவில்லை. வெறும் 15 ரூபாய் டிக்கெட்டில் எனது முழு குடும்பத்தையும் இழந்துவிட்டேன். அவர்கள் ஒரேநேரத்தில் இத்தனை பேரை அனுமதிக்காமல் இருந்திருந்தால், இந்த துயரமான விபத்தை தவிர்த்திருக்கலாம்" என்றார்.

'ரூ.15 கட்டணத்தில் மோர்பியில் முழு குடும்பத்தையும் இழந்தேன்':பாதிக்கப்பட்டவர்கள் உருக்கம்

இதையும் படிங்க:மோடி விசிட்டிற்காக புதுப்பிக்கப்படும் மோர்பி அரசு மருத்துவமனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.