ETV Bharat / bharat

jharkhand train accident: நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்.. ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு!

author img

By

Published : Jun 7, 2023, 2:47 PM IST

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் ரயில் வரும்போது தண்டவாளத்தில் டிராக்டர் சிக்கிக் கொண்ட நிலையில், ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Major train
ரயில் விபத்து

ஜார்க்கண்ட்: டெல்லியிலிருந்து புவனேஸ்வர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று(ஜூன் 6) மாலை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொகாரோ மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது போஜுதி ரயில் நிலையம் அருகே உள்ள சந்தால்டி ரயில்வே கிராசிங்கில் டிராக்டர் ஒன்று தண்டவாளத்தை கடந்து சென்றது. எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின்பக்க டயர்கள் ரயில்வே தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது.

அந்த வழியில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்ததால் அச்சமடைந்த ஓட்டுநர் டிராக்டரை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். ரயில் சற்று தொலைவில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் டிராக்டர் நிற்பதை கவனித்த ரயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார். இதனால் ரயில் நின்றது. ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பிரேக் போட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்கிழக்கு ரயில்வேயின் ஆத்ரா கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் குமார், "போஜுதி ரயில் நிலையத்தின் சந்தால்டி ரயில்வே கிராசிங்கில் ரயில்வே கேட் மூடும் போது, ஒரு டிராக்டர் ரயில்வே கேட்டில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த டிராக்டர் ரயில் தண்டவாளத்துக்கும் கேட்டிற்கும் இடையே சிக்கிக் கொண்டது. ரயிலின் ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் போட்டதால், ரயில் நின்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது" என்று கூறினார்.

நேற்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. பின்னர், ரயில்வே துறையினர் டிராக்டரை ரயில் பாதையிலிருந்து அகற்றினர். இதையடுத்து ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 45 நிமிடங்கள் தாமதமானதாக தெரிகிறது. டிராக்டரை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், தலைமறைவான டிராக்டர் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

முன்னதாக கடந்த 2ஆம் தேதி ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே நடந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் படுகாயமடைந்தனர். கவாச் கருவி இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டிய நிலையில், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து நடந்ததாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: MP Train Accident: மத்தியப்பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. ஒரு வாரத்தில் நிகழ்ந்த ரயில் சம்பவங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.