ETV Bharat / bharat

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு விவகாரம்..! உச்ச நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மேல்முறையீடு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 7:06 PM IST

Mahua Moitra challenging her expulsion: மக்களவையில் கேள்வி கேட்பதற்கு பணம் பெற்ற குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திரிமுணால் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Mahua Moitra moves Supreme Court challenging her expulsion from Lok Sabha
உச்ச நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மேல்முறையீடு

டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தின் கிருஷ்ணா நகர் நாடாளுமன்றத் தொகுதியின் திரிமுணால் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மக்களவையில் எழுப்பும் கேள்விகளுக்கு லஞ்சம் பெறுவதாகவும், அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்கு ஹிராநந்தினி குழுமத்திடம் லஞ்சம் பெற்றதாகவும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் தூபே குற்றம் சாட்டினார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தச் சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் தூபே கடிதம் எழுதி இருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் புகார் அளித்து இருந்தார்.

ஹிராநந்தினி குழுமத் தலைவர் தர்ஷன் ஹிராநந்தினிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவிற்கும் பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிஷிகாந்த் தூபே அளித்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நாடாளுமன்ற ஒழுங்கு குழுவிற்குச் சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹுவா மொய்த்ரா, நிஷிகாந்த் தூபே ஆகியோரிடம் விசாரணை நடத்திய நாடாளுமன்ற ஒழுங்கு குழு, மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைத்திருந்தது. அதன்படி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடந்த 8ஆம் தேதி மஹூவா மொய்த்ரா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, தன்னை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற ஒழுங்கு குழுவிற்கு அதிகாரமில்லை என மஹுவா மொய்த்ரா தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (டிச.11) தான் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, அரசியலமைப்பு பிரிவு 32இன் கீழ் மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஹிராநந்தினியிடம் இருந்து பணம் பெற்றதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் தூபே மற்றும் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை எனவும், ஹிராநந்தினி மற்றும் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்" - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.