ETV Bharat / bharat

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகளவில் சிறார் தற்கொலை - தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்

author img

By

Published : Mar 29, 2023, 8:46 PM IST

நாட்டில் அதிகமாக சிறார் தற்கொலை வழக்குகள் பதிவான மாநிலங்களின் பட்டியலை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்

டெல்லி: நாடு முழுவதும் பதிவாகும் குற்ற வழக்குகளை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சேமித்து வைத்து வருகிறது. இந்த வழக்குகளை பகுப்பாய்வு செய்து, அவற்றை குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இதனிடையே பாலியல், கொலை, விபத்து உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளின் புள்ளிவிவரங்களையும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், 2021 ஆம் ஆண்டில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் தற்கொலை வழக்குகள் அதிகமாக பதிவான மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 1,447 தற்கொலை சம்பவங்களுடன் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல 1,218 வழக்குகள் உடன் மேற்கு வங்கம் மாநிலம் 2ஆம் இடத்திலும், ஒடிசா மாநிலம் 1002 வழக்குகள் உடன் 3ஆம் இடத்திலும் உள்ளது.

2019-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் 31,741 சிறார் தற்கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த விவரங்களை உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா இன்று (மார்ச் 29) மாநிலங்களவையில் தெரிவித்தார். இந்த தற்கொலை சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் மூலம் மனோதர்பன் என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு உளவியல் சார்ந்த ஆதரவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா ஊரடங்குக்கு பின் மனோதர்பன் திட்டம் மிகவும் அவசியமாகிறது. நாட்டின் 716 மாவட்டங்களில் தேசிய மனநலத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான மனநலத் திட்டத்தை செயல்படுத்த சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிதி அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏன் அறிவிக்கப்படவில்லை? - தேர்தல் ஆணையம் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.