ETV Bharat / bharat

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

author img

By

Published : Aug 7, 2023, 7:06 PM IST

மக்களவையில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 3ஆம் தேதி மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Lok sabha
Lok sabha

டெல்லி : டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. டிஜிட்டல் இணையதளங்களில் சட்டத்திற்குட்பட்டு தனிநபர் தகவல்களை பயன்படுத்த அனுமதி அளிக்கவும் அதே நேரத்தில் தனிநபரின் தரவுகள் மீதான அவரது உரிமையை அங்கீகரிக்கும் வகையில் டிஜிட்டல் தனிநபர் பாதுகாப்பு மசோதா உருவாக்கப்பட்டது.

தனிநபர் ஒருவரின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் ஏறத்தாழ 250 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்க இடமளிக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை 5ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி மக்களவையில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இன்று (ஆகஸ்ட். 7) குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதாவில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர எதிர்க்கட்சிகள் எழுப்பிய தொடர் முழக்கங்களுக்கு இடையே மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் இன்று சபையில் விவாதித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்றும் ஆனால், பொது மக்களின் உரிமை குறித்து எந்த எதிர்க்கட்சி உறுப்பினரும் கவலைப்படுவதில்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்தியாவில் தனிநபர் தகவல்கள் டிஜிட்டல் முறையில் நிர்வகிக்ப்படுவதை இந்த டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட மசோதா கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேரடியாக சேகரிக்கப்படும் தனிநபர் தகவல்களும் பின்னாளில் டிஜிட்டல் மயமாக்கப்படும் போது, அதுவும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வர இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள நபர்களின் தகவல்கள் வெளிநாடுகளில் சேகரிக்கப்படுவதற்கும், நிர்வகிக்கப்படுவதற்கும் சட்ட மசோதாவில் கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் தனிநபர் கணக்கை நீக்கினால், சம்பந்தப்பட்ட நிறுவனமும் அதனை முழுமையாக நீக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று தனியார் நிறுவனங்கள் வருகைப் பதிவுக்காக ஊழியரின் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தரவுகளை சேகரித்தால் அதற்காக ஊழியரின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் எந்த நிறுவனம் தங்களின் தரவுகளை பயன்படுத்துகிறது என்பதை பயனாளர் தெரிந்து கொள்ள உதவும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு 81 திருத்தங்களையும், 12 பரிந்துரைகளையும் வழங்கியதைத் தொடர்ந்து புதிய மசோதா உருவாக்கப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : மணிப்பூர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்.. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க திட்டம் எனத் தகவல்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.