ETV Bharat / bharat

சீட் ஒதுக்கப்படாத அதிருப்தி: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமான மாஜி துணை CM!

author img

By

Published : Apr 14, 2023, 9:34 PM IST

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் சீட் ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த பாஜகவை சேர்ந்த முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமண் சவதி, அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

Lakshman chavadi
லட்சுமண் சவதி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமண் சவதி, அதானி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதற்கிடையே, பாஜக வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், அதானி தொகுதி லட்சுமண் சவதிக்கு ஒதுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவகுமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரை இன்று காலை (ஏப்ரல் 14) சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து லட்சுமண் சவதி காங்கிரஸ் கட்சியில் முறைப்படி இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதானி தொகுதியில் நான் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் சம்மதம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்காக எனது முழு பங்களிப்பையும் அளிப்பேன். எனக்கு சீட் ஒதுக்குவதாக கூறிவிட்டு, பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோர் என்னிடம் பேசவில்லை. பாஜகவில் கொள்கைகள் பின்பற்றப்படவில்லை. அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள்" என்றார்.

அதானி சட்டமன்றத் தொகுதியில் 2004, 2008, 2013 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட லட்சுமண் சவதி வெற்றி பெற்றார். கடந்த 2018ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மகேஷ் குமட்டல்லியிடம் அவர் தோல்வியடைந்தார். 2019ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிய மகேஷ் பாஜகவில் இணைந்தார்.

அப்போது இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக வேட்பாளராக மகேஷ் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக லட்சுமண் சவதி வாக்கு சேகரித்தார். எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் 3 முறை அமைச்சராக இருந்த லட்சுமண் சவதி, துணை முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பாஜகவில் இருந்து சவதி விலகியுள்ள நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், "காங்கிரஸ் கட்சியில் சவதி இணைந்தது வருத்தம் அளிக்கிறது. அரசியலில் சில நேரங்களில் இதுபோன்று நிகழக்கூடும். உண்மையான தொண்டர்கள் பாஜகவை விட்டு விலக மாட்டார்கள். பாஜக வெற்றிக்காக நாங்கள் உழைப்போம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: கவுகாத்தி எய்மஸ் மருத்துவமனையைத் திறந்து வைத்த பிரதமர் - வடகிழக்கு மாநிலங்களில் முதல் எய்ம்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.