ETV Bharat / bharat

Karnataka Election : கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது

author img

By

Published : May 10, 2023, 6:20 AM IST

Updated : May 10, 2023, 8:53 AM IST

224 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவிற்கு இன்று ஒரே கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

Karnataka Election 2023
Karnataka Election 2023

பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதோடு பஞ்சாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சியும் கர்நாடக தேர்தலில் களமிறங்கி உள்ளது.

இதில் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதி விவசாய சங்கத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளில் களமிறங்கி உள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற‌னர்.

150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும், தென் இந்தியாவில் கால்பதிக்க கர்நாடகா வாசலாகவும் கருதப்படுவதால் ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர‌ மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கடந்த 3 மாதங்களாகத் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி கடந்த 7 நாட்களில் மட்டும் 31 மாவட்டங்களில் நடைபெற்ற 18 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பெங்களூரு, மைசூரு, மங்களூரு உட்பட 5 முக்கிய நகரங்களில் வாகன பேரணி மேற்கொண்டார். மறுபுறம் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் என பெரும் பட்டாளமே திரண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று 224 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள‌து. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்குத் தேவையான பூத் பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 5 கோடியே 24 லட்சத்து 11 ஆயிரத்து 557 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்று உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏற்ப மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 94 ஆயிரத்து 931 பேர் வீட்டிலிருந்தே வாக்களித்துள்ளனர். வீட்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 97 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.

ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு ஏற்ற வகையில் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பான மற்றும் அமைதியான தேர்தலை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்து நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். முதல் முறை வாக்களிக்கும் இளம்தலைமுறை வாக்காளர்களும் ஆர்வமுடன் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க : Karnataka Election: 'தன்னைப்பற்றிய வைரல் கடிதம்; பாஜகவின் சதிச்செயல்!' - சித்தராமையா குற்றச்சாட்டு!

Last Updated : May 10, 2023, 8:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.