ETV Bharat / bharat

ரூ 4 லட்சம் மின் கட்டணம்.. கர்நாடாகாவில் தொடரும் மின் கட்டண கோளாறு!

author img

By

Published : Jul 12, 2023, 10:29 AM IST

கர்நாடக மாநிலத்தில் ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.4 லட்சம் என சிறிய வீட்டில் வசிக்கும் தம்பதிக்கு வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடாகாவில் தொடரும் மின் கட்டண கோளாறு
ஒற்றை அரை படுக்கையறை வீட்டில் ரூ 4 லட்சம் மின் கட்டணம்

பெல்லாரி: கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இந்திரா நகரில் உள்ள ஒரே ஒரு படுக்கையறை (1 BHK) கொண்ட வீட்டில் மகேஷ் மற்றும் வீரம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் 4 லட்சம் ரூபாய் என வந்துள்ளது.

இந்த தம்பதியருக்கு மின் கட்டணம் பொதுவாக ரூ.1,000க்கும் குறைவாகவே வரும். இம்முறை ஜூன் மாதத்துக்கான கட்டணம் ரூ.4,26,852 என வந்துள்ளது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் மகேஷ் கூறுகையில் “வழக்கமாக மாதந்தோறும் ரூ.700 முதல் ரூ.1,000 வரை மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த முறை அதிக தொகையை செலுத்துமாறு கூறியிருந்தனர்” என்றார்.

முன்னதாக, மகேஷிடம் தனது வீட்டின் மீட்டர் ரீடரை அடிப்படையாகக் கொண்ட மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, மகேஷ் தனது ஜூன் மாதத்திற்கான மின் பயன்பாட்டை ஆன்லைனில் சோதித்தபோது, 4 லட்சம் ரூபாய் பில் தொகை காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Mekedatu: கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை அறிவிப்பு; கலக்கத்தில் தமிழக விவசாயிகள்!

இது குறித்து குல்பர்கா மின் விநியோக நிறுவனத்தில் மகேஷ் புகார் செய்துள்ளார். அவர் உடனடியாக புகார் அளித்ததைத் தொடர்ந்து GESCOM ஊழியர்கள் மீட்டர் ரீடிங்கை சரி பார்த்து வந்தனர். மீட்டரில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பில் தொகை தவறாக இருந்தது என தெரிய வந்துள்ளது. பின்னர் மகேஷிடம் ஜூன் மாத மின் கட்டணம் ரூ.885 செலுத்துமாறு அவருக்கு புதிய பில் வழங்கப்பட்டது.

இது குறித்து மகேஷின் மனைவி வீரம்மா கூறுகையில், "எங்கள் வீட்டில் குளிர்சாதன பெட்டி மற்றும் மூன்று மின் விசிறிகள் உள்ளன. குளிர் காலத்தில் மின் கட்டணம் குறையும். கடந்த சில மாதங்களில் மின் கட்டணம் ரூ.700 முதல் ரூ.1,000 வரை இருந்தது. அதனையடுத்து மின் விசிறிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டியை அடிக்கடி பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம். மேலும், தேவையானபோது மட்டுமே வாஷிங் மெஷினை பயன்படுத்துகிறோம்" என கூறினார்.

அதே போன்று, கர்நாடகாவில் கடந்த மாதம் 90 வயது மூதாட்டி ஒருவருக்கு இரண்டு எல்இடி பல்புகள் மட்டுமே உள்ள தனது சிறிய குடிசைக்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்தது. அந்த மூதாட்டிக்கு வழக்கமாக மாதம் ரூ.70 அல்லது 80 மின்கட்டணம் வரும். ஆனால் கடந்த முறை ரூ.1,03,315 செலுத்துமாறு கேட்டுள்ளனர். மின்வாரிய ஊழியர்கள் அந்த மூதாட்டி குடிசைக்கு சென்று பார்த்தபோது மீட்டரில் கோளாறு இருந்ததை கண்டறிந்தனர்.

இதற்கு முன் கர்நாடகாவின் உல்லாலில் வசிக்கும் மற்றொரு குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் பில் வந்துள்ளது. மீட்டர் ரீடரில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த பிழை ஏற்பட்டுள்ளது என மின் வாரியம் தெரிவித்தது. தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் கர்நாடகாவில் நடந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க: மின்கட்டணம் ரூ.1 லட்சமா! கூரை வீட்டில் வாழும் மூதாட்டிக்கு ஷாக் கொடுத்த மின்வாரியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.