ETV Bharat / bharat

Exclusive:'ஆடைக்காக விமர்சித்தவர்கள்; இப்போது பாராட்டுகிறார்கள்' - தங்கம் வென்ற வீராங்கனை நிகத் ஜரீனின் தந்தை உருக்கம்!

author img

By

Published : May 25, 2022, 8:01 PM IST

பெண்களை பலவீனமானவர்களாக கருதும் சமூகத்தில் நிகத் ஜரீனின் பயணம் எளிதாக இருக்கவில்லை என்று அவரது தந்தை முகமது ஜமீல் அகமது தெரிவித்தார். ஆடைக்காக விமர்சித்தவர்கள், தங்கம் வென்ற பிறகு பாராட்டினார்கள் என்றும் கூறினார்.

Nikhat
Nikhat

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த 25 வயதான குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன், அண்மையில் துருக்கியில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அவருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நிகத் ஜரீன் மற்றும் அவரது தந்தை முகமது ஜமீல் அகமது இருவரும் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்தனர்.

பெண்களை பலவீனமானவர்களாக கருதும் சமூகத்தில், நிகத்தின் இந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை என்று அவரது தந்தை முகமது ஜமீல் அகமது தெரிவித்தார். 'ஆடைக்காக விமர்சிக்கப்பட்டது முதல் ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்து போராடியது வரை’ நிகத் சர்வதேச சாம்பியன் ஆவதற்கு வழிவகுத்த பல்வேறு சம்பவங்கள் குறித்தும் நிகத்தின் தந்தை விவரித்தார். அந்த உரையாடலை இப்போது பார்க்கலாம்...

கேள்வி: நிகத்திற்கு குத்துச் சண்டையில் ஆர்வம் உள்ளது என்பதை எப்போது கண்டுபிடித்தீர்கள்?

பள்ளிப்பருவங்களில் கோடை விடுமுறை காலத்தில், நிகத்தை விளையாட்டுத் திடலுக்கு அழைத்துச் செல்வேன். அங்கு மற்ற குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடுவாள். அப்போதுதான் அவளுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கிறது என்பது தெரிய வந்தது. முதலில் ஓட்டப்பந்தயத்தில்தான் தொடங்கினாள். ஒருநாள் விளையாட்டுத் திடலில் சில குத்துச்சண்டை வீரர்கள் பயிற்சி செய்வதைப் பார்த்துவிட்டு, இந்த விளையாட்டில் ஏன் பெண்கள் யாரும் இல்லை? என்று என்னிடம் கேட்டாள். இந்த விளையாட்டில் ஈடுபட மிகவும் வலிமை வேண்டும்; கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினேன். உடனே, எனக்கு இந்த விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்று கூறினாள். அப்படித்தான் குத்துச்சண்டைக்குள் அவள் சென்றாள்.

கேள்வி: பெண் குழந்தைகளை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்துவது கடினம் என்ற சமூக கட்டமைப்பில்தான் வாழ்கிறோம். அப்படியிருக்க உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?

நான் விளையாட்டு வீரராக இருந்தேன். அதனால், அவளுக்கு குத்துச்சண்டையில் ஆர்வம் இருக்கிறது என்று புரிந்ததும், அவளைப் பயிற்சிக்கு அனுப்பினேன். ஆரம்பத்திலிருந்தே அவள் சிறப்பாக விளையாடினாள். நான் ஏன் அவளை விளையாட அனுமதிக்கிறேன் என்று அனைவரும் கேட்பார்கள். குறிப்பாக குத்துச்சண்டையில் ஏன் ஈடுபடுத்தினேன், வேறு ஏதாவது விளையாட்டில் கூட சேர்த்திருக்கலாம் என்று எனது நண்பர்கள் கூட கேட்டனர். அது அவளது விருப்பம் என்று கூறிவிடுவேன். புறம் பேசுவோரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயாரானபோது, அவளது ஆடைகள் குறித்துப் பலரும் விமர்சித்தார்கள். நான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தேன். இப்போது அவள் தங்கப்பதக்கம் வென்றுவிட்டாள். அவளை விமர்சித்த அதே மக்கள் இப்போது, என்னையும் அவளையும் பாராட்டுகிறார்கள். இப்போது நிகத்திடம் பேசவும், அவளைப் பார்க்கவும் ஆசைப்படுகிறார்கள்.

கேள்வி: விளையாட்டுத்துறையில் உள்ள வீராங்கனைகளுக்கு அவர்களது தந்தையர் மிகவும் உறுதுணையாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிவி சிந்து, சாய்னா நேவால், இப்போது நிகத். நாட்டில் உள்ள தந்தையர் மற்றும் அவர்களது மகள்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

நாட்டில் திறமையான பல விளையாட்டு வீராங்கனைகள் இருக்கின்றனர். நம் நாட்டில் ஒரு விளையாட்டு வீராங்கனையின் பெற்றோராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. பெற்றோர்களுக்கு நான் கூறுவது என்னவெனில், யாருடைய பேச்சையும் கேட்காதீர்கள். உங்களது மகள்கள் விரும்புவதை செய்ய அனுமதியுங்கள். விளையாட்டுப் பெண்களை வலிமையாக்கும். அவர்களை வாழ்வின் முன்னேற்றப் பாதையில் செலுத்தும்.

குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீனுடனான உரையாடல்...

கேள்வி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 5வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளீர்கள். இதை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கிறீர்கள்?

ஆம், இது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளேன். இது எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, பாரிஸ் ஒலிம்பிக் போன்றவற்றில் கலந்து கொள்ள என்னை ஊக்குவிக்கும்.

கேள்வி: கரோனா ஊரடங்கு போன்ற சூழல் உங்களுக்கு எந்த அளவுக்கு கடினமாக இருந்தது? அதிலிருந்து மீண்டு வர எது உங்களை ஊக்கப்படுத்தியது?

எனது பயணம் ஒரு லோலார்கோஸ்டர் போன்றது. அதில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தன. ஆனால், நான் எப்போதும் என்னை நம்பினேன். உலக சாம்பியன் போட்டியில் நான் ஒரு நாள் வெற்றி பெறுவேன் என்றும், எனது கனவை அடைவேன் என்றும் எனக்கு நம்பிக்கை இருந்தது. எனக்கு காயங்கள் ஏற்பட்டன. அதுபோன்ற கடினமான நிலைமைதான் என்னை மேலும் வலிமையாக்கியது. இந்த தன்னம்பிக்கையால்தான் என்னால் தங்கம் வெல்ல முடிந்தது. தங்கம் வென்றதன் மூலம், நான் பட்ட அனைத்து கஷ்டங்களுக்கும் அர்த்தம் கிடைத்துவிட்டது.

கேள்வி: உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக நீங்கள் தயாரானது குறித்து கூறுங்கள்...

நான் மிகவும் கடினமாக உழைத்தேன். எந்த நிலையிலும் நான் தங்கப்பதக்கம் வெல்வேன் என்று எனக்குத் தெரியும். நான் என்னை நம்பினேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனையை நான் தோற்கடித்தது எனக்கு மேலும் நம்பிக்கையை தந்தது. குத்துச்சண்டை வீரர்களின் பலவிதமான யுக்திகள் எனக்குப் பயிற்சி செய்ய உதவின.

கேள்வி: உங்களின் உச்சபட்ச கனவு என்ன?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதுதான் குறிக்கோள். ஆனால் தற்போது காமன்வெல்த் போட்டிகளுக்காக தயாராகி வருகிறேன்.

இதையும் படிங்க: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.