ETV Bharat / bharat

தொழிலதிபர் ராகுல் பஜாஜின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

author img

By

Published : Feb 13, 2022, 10:27 PM IST

தொழிலதிபர் ராகுல் பஜாஜுக்கு அவரது மகன்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தபின், முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் மின் மயானத்தில் தகனம்செய்யப்பட்டது.

தொழிலதிபர் ராகுல் பஜாஜ்
தொழிலதிபர் ராகுல் பஜாஜ்

புனே: மூத்தத் தொழிலதிபரும், பஜாஜ் ஆட்டோவின் முன்னாள் தலைவருமான ராகுல் பஜாஜ் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 12) தனது 83ஆவது வயதில் காலமானார். அவரது உடல் இன்று (பிப்ரவரி 13) காலைவரை ரூபி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் உடல் காலை 8.30 மணியளவில் அகுர்தியில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

அங்கு அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட உடலுக்கு அவரது மகன்களான ராஜீவ், சஞ்ஜிவ் ஆகியோர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

இறுதிச் சடங்கில் முக்கியப் பிரமுகர்கள்

பின்னர் முழு அரசு மரியாதையுடன் மின் மயானத்தில் தகனம்செய்யப்பட்டது. பத்ம பூஷண் பெற்ற தொழிலதிபரான ராகுல் பஜாஜின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே, யோகா குரு பாபா ராம்தேவ், மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக், புனே மாநகர காவல் ஆணையர் அமிதாப் குப்தா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.

கடந்த ஒரு மாதமாக இருதயம், நுரையீரல் பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த ராகுல் பஜாஜ் சனிக்கிழமை இறந்ததாக ரூபி ஹால் மருத்துவமனையின் தலைவர் பார்வேஜ் கிரான்ட் தெரிவித்தார்.

நாடு முழுவதும் எதிரொலித்த 'ஹமாரா பஜாஜ்' கோஷம்

1938ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த பஜாஜ், தனது பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் 1958இல் நிறைவுசெய்தார். மேலும் 1964ஆம் ஆண்டு ஹார்வார்ட் பிசினஸ் கல்வி மையத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலராக 1968 லிருந்து செயல்பட்டார். பின்னர் 1972ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இது தவிர இவர் பன்னாட்டு வர்த்தக கவுன்சில், உலகப் பொருளாதார மன்றம் ஆகியவற்றின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

தொழிலதிபர் ராகுல் பஜாஜ்
தொழிலதிபர் ராகுல் பஜாஜ்

வாகனத் துறையில் பஜாஜை வளரச் செய்ததில் ராகுல் பஜாஜின் பங்கு அளப்பரியது. இவருக்கு 2001ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

அவர் தலைமையில், பஜாஜ் ஆட்டோ அடுத்த சில தசாப்தங்களில் குறிப்பாக அதன் இருசக்கர வாகனங்கள் (ஸ்கூட்டர்), 'ஹமாரா பஜாஜ்' என்ற கோஷத்துடன் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தன.

மக்கள் சேவையில் மாநிலங்களவை உறுப்பினராக ராகுல்

ராகுல் பஜாஜ் 2021ஆம் ஆண்டு தலைவர் பதவியிலிருந்து விலகினார். அந்தப் பதவி அவரது உறவினரான நீரஜ் பஜாஜுக்கு வழங்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் இவர் பஜாஜ் குழுமத்தின் நிர்வாகத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். தொடர்ந்து 2006 முதல் 2010 வரை மாநிலங்களவை உறுப்பினராகச் செயல்பட்டார்.

இதையும் படிங்க: மோடி ஆட்சியில் ரூ.5.35 லட்சம் கோடி மோசடி - ராகுல் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.