ETV Bharat / bharat

இந்தியா மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்தை கொண்டுள்ளது: வி.கே.சிங்

author img

By

Published : Dec 12, 2022, 5:36 PM IST

இந்தியா மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக உள்ளதால், விமான நிலையங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் விமான நிலையங்கள் ஆணையம் ஈடுபட்டு வருகிறது என்று விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார்.

வி.கே.சிங்
வி.கே.சிங்

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த கூட்டத்தில் இன்று (டிசம்பர் 12) மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) கூற்றுப்படி, இந்தியா மூன்றாவது மிகப்பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையாக உள்ளது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், விமான நிலையங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் விமான நிலையங்கள் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், விமான போக்குவரத்துத்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் தனியார் விமான நிலைய குழுக்கள் முடிவு செய்துள்ளன.

குஜராத்தில் தொலேரா, ஹிராசர், ஆந்திரப் பிரதேசத்தில் தாகதர்த்தி, போகபுரம், ஒரவக்கல், அருணாச்சலப்பிரதேசம் இட்டாநகரில் உள்ள டோன்யி போலோ ஆகிய 6 பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் ஒரவக்கல் மற்றும் டோன்யி போலோ விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையக் கட்டடக் கட்டுமானம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக 146 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, பணிகள் நிறைவடைந்தன.

சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் 1125.91 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடப்பணிகள் 710.35 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் 46.24 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடங்கள் ரூ.23,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் - அஜஸ் பட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.