ETV Bharat / bharat

"மணிப்பூர் விவகாரத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார்" - மத்திய அமைச்சர் அமித் ஷா!

author img

By

Published : Jul 25, 2023, 7:15 PM IST

மணிப்பூர் விவகாரத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார். மணிப்பூர் கலவரம் குறித்து அரசுக்கு மறைக்க ஒன்றுமில்லை என்றும் அது தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

Amit Shah
Amit Shah

டெல்லி : மணிப்பூர் விவகாரம் குறித்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க தயார் என்றும் அது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தான் கடிதம் எழுதி உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முழுமையாக நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.

மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என ஏறத்தாழ 26 எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

மக்களவையில் பல்வேறு மாநிலங்களுக்கான கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு மறைத்து வைக்க எதுவும் இல்லை என்றும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்புபவர்கள் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்றும் கூட்டுறவுகளின் மீதும், தலித் மற்றும் பெண்களின் நலன்களில் கூட அக்கறை காட்டுவது இல்லை என்றும் கூறினார்.

மேலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என்றும் அது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதை வலியுறுத்த விரும்புவதாக கூறினார். எதைக் கண்டு அரசு பயப்படப் போவதில்லை என்று அமித் ஷா கூறினார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக யார் விவாதிக்க விரும்பினாலும் விவாதிக்க தயார் என்றும் அரசு எதையும் மறைத்து வைக்கவில்லை என்று அமித ஷா தெரிவித்தார். இதையடுத்து மக்களவையில் பல்வேறு மாநிலங்களுக்கான கூட்டுறவு சங்க திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மசோதா நிறைவேறியதை அடுத்து வழக்கமான நேரத்திற்கு முன்னதாக அவை ஒத்திவைக்கப்பட்டது. நாளை புதன்கிழமை வழக்கமாக மீண்டும் மக்களவை கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Wang Yi : சீன வெளியுறவு அமைச்சராக வாங்க் யீ நியமனம்! தடுப்புக் காவலில் கின் கேங்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.