ETV Bharat / bharat

20 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரை...

author img

By

Published : Jun 25, 2023, 11:01 PM IST

இஸ்லாம் மதத்தின் ஐந்து தூண்களாக கருதப்படுவதில் ஹஜ் யாத்திரையும் ஒன்றாகும். உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் திறன் படைத்தவர்கள், தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த புனித யாத்திரையை மேற்கொள்வார்கள். கரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு முழுமையான மக்கள் அனுமதியோடு நடக்கும் ஹஜ் யாத்திரை இதுதான்.

Hajj 2023
Hajj 2023

மக்கா (சவுதி அரேபியா): சில ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக இருந்த கட்டுப்பாடுகள் முடிந்து, உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றான சவுதி அரேபியாவின், புனித நகரமாக கருதப்படும் மெக்காவிற்கு, இந்த வாரம் ஹஜ் புனித யாத்திரையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஹஜ் புனித யாத்திரை, இஸ்லாம் மதத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். இதனை உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் செய்யும் திறன் படைத்த ஒவ்வொரு இஸ்லாமியர்களும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்வார்கள். இந்த புனித யாத்திரை மேற்கொள்வதால், தங்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதாகவும், இந்த யாத்திரை தங்களை இறைவனுக்கு அருகில் கொண்டு செல்வதாகவும், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

1920ஆம் ஆண்டுகளில் மெக்காவை கைபற்றிய சவுதியின் அரசு குடும்பம், ஹஜ் புனித யாத்திரைக்கான ஏற்பாடு செய்வதை பெருமையாகவும், தங்களின் சட்டப்பூர்வமான தன்மையாக கருதுகிறது. மெக்காவின் கட்டமைப்புகளை நவீன முறையில் மேம்படுத்துவதற்காக இந்த அரச குடும்பம், பல நூறு கோடிகள் செலவு செய்வார்கள். ஆனால் சில நேரங்களில் ஹஜ் புனித யாத்திரை சோகத்தில் முடிகிறது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட புனித யாத்திரிகள் இடையே ஏற்பட்ட நெரிசலில், சுமார் 2ஆயிரத்து 400 யாத்திரிகள் இறந்தது உலகமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஹஜ் புனித யாத்திரையின் வரலாறு:

இந்த புனித யாத்திரையில் உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்கள், மெக்காவில் ஒன்று சேர்க்கப்படுகிறார்கள். அங்கு இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டை பின் பற்றி நடந்து, இறைத்தூதர்கள் இப்ராஹிம் மற்றும் இஸ்மாயில் அவர்களின் வாழ்க்கை பயணத்தை மீண்டும் நினைவு படுத்திக் கொள்கிறார்கள். இப்ராஹிம் மற்றும் இஸ்மாயில், கிறிஸ்தவ மற்றும் யூத மரபின் படி ஆபிரகாம் இஸ்மவேல் என்று அழைக்கப்படுகிறார்கள்.

திருகுர்ஆனில் குறிப்பிட்டுள்ளதன் படி, இறைத்தூதர் இப்ராஹிம் தனது மகன் இஸ்மாயிலை இறைவனின் கட்டளைக்கிணங்க தியாகம் செய்ய அழைத்து செல்கிறார். ஆனால் கடைசி நேரத்தில் இறைவன் அவரை தடுத்து நிறுத்தி விடுகிறார். அதன் பின்னர் இறைத்தூதர்கள் இப்ராஹிமும் இஸ்மாயிலும் இணைந்து காபாவைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்தவ மற்றும் யூத மரபுகளின் அடிப்படையில், ஜெருசலேமில் உள்ள ஒரு முக்கிய புனித தளங்களுள் ஒன்றான மோரியா மலையில் இப்ராஹிம் (ஆபிரகாம்) தனது மற்றொரு மகன் (ஈசாக்) ஐசக்கை தியாகம் செய்ததாக கருதப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில், முகம்மது நபி (ஸல்) அவர்கள் மற்றும் இஸ்லாத்தின் வருகை மக்களிடையே தோன்றும் வரை, அரேபியர்களிடையே பலதெய்வ வழிபாட்டிற்கான மையமாக காபா இருந்தது வந்தது, அந்த வழிபாடுகளை முகம்மது நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் இருந்து நீக்கி, அந்த இடத்தை புனிதப்படுத்தி, ஹஜ் புனித யாத்திரையைத் தொடங்கினார்கள். முஸ்லீம்கள் காபாவை வணங்குவதில்லை, அது ஒரு கனசதுர வடிவ அமைப்பு, கருப்பு நிறத்தில் தங்க-எம்பிராய்டரியால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு பெரிய துணியால் மூடப்பட்டிருக்கும். அதை இஸ்லாமியர்கள் மிகவும் புனிதமான இடமாகவும், ஒற்றுமை மற்றும் இறைவனின் ஏகத்துவத்திற்கு சக்திவாய்ந்த ஒரு அடையாளமாகவும் கருதுகின்றனர்.

உலகில் எந்தப் பகுதியிலிருந்தாலும் இஸ்லாமியர்கள் இருந்தாலும், தாங்கள் தினமும் நிறைவேற்றும் தொழுகையின் போது, மெக்காவில் இருக்கும் இந்த காபாவை நோக்கி நின்றுதான் தொழுகையை நிறைவேற்றுவார்கள். இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) காலத்திலிருந்து இந்த ஹஜ் புனித யாத்திரை நிறைவேற்றப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு, உலகமெங்கும் இருந்த கொரொனா கட்டுப்பாட்டால். சவுதி அரேபிய அரசு சில ஆயிரம் மக்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை மட்டும் ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதித்தது. இந்த ஆண்டுதான் முழுமையாக கட்டுப்பாடுகள் நீங்கி நடக்கும் ஹஜ் புனித யாத்திரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹஜ் புனித பயணத்திற்கு இஸ்லாமியர்கள் எவ்வாறு தயாராகிறார்கள்?

சில யாத்திரிகள், இந்த ஹஜ் புனித பயணத்திற்காக, தங்களது வாழ்நாள் முழுவதும் சேமிப்பில் ஈடுபடுகிறார்கள், சவுதி அரேபிய அரசு ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கும் அனுமதிக்கு சிலர் காத்து இருப்பார்கள். சில சுற்றுலா நிறுவனங்கள், அனைத்து பொருளாதார நிலையில் இருக்கும் மக்களுக்கு ஏற்றவாறு திட்டங்களை வழங்குகின்றனர். மேலும், சில தொண்டு நிறுவனங்கள் நிதி தேவையுள்ள மக்களுக்கு உதவுகின்றன.

ஹஜ் புனித யாத்திரையை தொடங்கும் போது, யாத்திரிகள் "இஹ்ராம்" எனப்படும் ஒரு புனித நிலையை அடைகிறார்கள். பெண்கள் தங்களை அழகு படுத்துவதையும், வாசனைத் திரவியங்கள் அணிவதையும் தவிர்த்துவிட்டு தங்கள் தலை முடியை மறைத்து கொள்கின்றனர். அதேபோல் ஆண்களும், தையல் ஏதுமற்ற ஒரு வெள்ளை நிற ஆடையை அணிந்து கொள்கின்றனர். அவர்கள் அணியும் ஆடையில் தையல் ஏதும் இருக்க கூடாது என்பது சட்டம். இதன் மூலம் செல்வந்தர் மற்றும் ஏழை என் வேற்றுமை கண்டறிய முடியாது.

யாத்திரிகள் இஹ்ராம் கட்டிவிட்டால், அவர்கள் தங்களுடைய தலைமுடியை வெட்டுவது, நகங்களை வெட்டுவது மற்றும் உடலுறவில் ஈடுபடுவது ஆகியவை அவர்களுக்கு தாடை செய்யப்பட்டுள்ளவை. மேலும் அவர்கள் எவரிடமும் வாதிடவோ, சண்டையிடவோ கூடாது. ஹஜ் யாத்திரைக்குச் செல்லும் யாத்திரிகளில் பெரும்பாலானோர், மெக்காவிற்கு செல்வதற்கு முன் மதினாவிற்கு செல்வார்கள். அங்கு இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடம் மற்றும் இஸ்லாம் மதத்திற்காக முதலில் கட்டிய மசூதி இடம் பெற்றுள்ளது.

ஹஜ் யாத்திரையின் போது நடப்பது என்ன?

முஸ்லீம்கள் மெக்காவில் உள்ள காபாவை ஏழு முறை சுற்றி வந்து பிரார்த்தனை செய்வதில் இருந்த ஹஜ் தொடங்குகிறது. பின்னர் அவர்கள் இரண்டு மலைகளுக்கு இடையில் தனது மகன் இஸ்மாயிலுக்கு தண்ணீர் தேடும், இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் மனைவி ஹாஜரின் வாழ்வை நினைவுகூரும் வகையில் நடக்கிறார்கள். (இது முஸ்லீம், கிறிஸ்தவ மற்றும் யூத மரபுகளில் வெவ்வேறு வடிவங்களில் நிகழும் ஒரு சம்பவம்). இவை அனைத்தும் உலகின் மிகப் பெரிய மசூதியான காபாவில் நடைபெறும்.

அடுத்த நாள், யாத்திரிகர்கள் மக்காவிலிருந்து கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அராஃபத் மலைக்குச் செல்கிறார்கள். அங்கு தான் இறைத்தூதர் முகம்மது (ஸல்), தனது இறுதிப் பிரசங்கத்தை தன் மக்களுக்கு வழங்கினார். யாத்திரிகள் அங்கேயே நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டு, தங்களின் பாவங்களை மன்னிக்கும்படி இறைவனிடம் கேட்பார்கள். இது ஹஜ் புனித யாத்திரையின் ஆன்மீக ரீதியாக உயர்ந்ததாக பலர் கருதுகின்றனர்.

பின் அங்கிருந்து, சூரியன் அச்தமன்மாகும் நேரத்தில், யாத்திரிகர்கள் அராஃபத் என்னும் இடத்திற்க்கு மேற்கே 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்தலிஃபா என்ற இடத்திற்கு செல்வார்கள். சிலர் நடந்து செல்வார்கள், சிலர் பேருந்துகளில் செல்வார்கள். அடுத்த நாள் மினா பள்ளத்தாக்கில் சாத்தானைக் கல்லெறிவதற்காக, அவர்கள் கூழாங்கற்களை எடுக்கிறார்கள். அங்கு தான் இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளின் கட்டளையைப் புறக்கணிக்க ஆசைப்பட்டதாக இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். உலகின் மிகப்பெரிய கூடார முகாம்களில் ஒன்றான மினாவில் யாத்திரிகர்கள் பல இரவுகள் தங்குகிறார்கள்.

இருதியாக புனித ஹஜ் யாத்திரை, மெக்காவில் உள்ள காபாவை சுற்றிய வந்தபின், மினாவில் கற்களை வீசியதோடு, ஹஜ் புனித யாத்திரை முடிவுக்கு வருகிறது. ஆண்கள் அடிக்கடி தங்கள் தலையை மொட்டை அடித்துக்கொள்வார்கள் மற்றும் பெண்கள் ஒரு கைப்புடியளவு (பூமுடியை) வெட்டிக்கொள்வார்கள், இந்த செயல் புதுப்பித்தலைக் குறிக்கிறது. ஹஜ் புனித யாத்திரையை முடித்தவர்கள் "ஹஜ்" அல்லது "ஹஜ்ஜா" என்ற பட்டத்தை பெறுகிறார்கள், இது ஒரு பெரிய மரியாதைக்குரிய பட்டமாகும். இன்னும் சிலர், ஹஜ் பயணத்தை நினைவு கூறும் வகையில், தங்களது இல்லங்களில் காபாவின் படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொள்வார்கள்.

ஹஜ் புனித யாத்திரையின் இறுதி நாட்கள் ஈதுல்-அதா அல்லது தியாகத்தின் பண்டிகையுடன் ஒத்துப்போகின்றன. இது இறைவன் இறைத்தூதர் இப்ராஹிமின் நம்பிக்கையின் சோதனை செய்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகும். மூன்று நாள் இந்த பண்டிகையின் போது, இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்கின்றனர். இதன் மூலம் தியாக உணர்வை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு கட்டுபாடுகளை தளர்த்திய சவூதி அரேபியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.