ETV Bharat / bharat

Rajasthan Election 2023: முடிவுக்கு வருமா கெலாட், பைலட் மோதல்? - நாளை கார்கே தலைமையில் முக்கிய ஆலோசனை!

author img

By

Published : May 25, 2023, 8:09 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நாளை முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், ராஜஸ்தான் காங்கிரசில் நிலவும் உட்கட்சிப் பூசலுக்கு தீர்வு காண காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Gehlot Pilot
கெலாட்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தது முதலே அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, பைலட் கெலாட் அரசுக்கு தொடர்ந்து தலைவலி கொடுத்து வருகிறார்.

கடந்த பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்கள் தொடர்பாக கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வரும் சச்சின் பைலட், இந்த ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார். பாஜக முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக அசோக் கெலாட் செயல்படுவதாக, சச்சின் பைலட் அண்மையில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழலுக்கு எதிராக ஐந்து நாட்கள் நடைபயணத்தையும் சச்சின் பைலட் மேற்கொண்டார். அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரையில் 125 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்டார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டே பைலட் இந்த யாத்திரையை மேற்கொண்டதாக கூறப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு சச்சின் பைலட் முக்கிய பங்காற்றினார். முதலமைச்சர் பதவி கிடைக்கும் என அவர் எதிர்பார்த்த நிலையில், பைலட்டிற்கு துணை முதலமைச்சர் பதவி மட்டுமே கிடைத்தது. பிறகு அதுவும் நீடிக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பைலட் தீயாக வேலை செய்து வருகிறார்.

இந்த சூழலில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு ஆட்சியைக் கைப்பற்றியது போல, ராஜஸ்தான் தேர்தலிலும் இணைந்து செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. இதனால், அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையிலான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறது.

அதன்படி, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நாளை(மே.26) மாலை 4 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடசரா மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களுக்கு இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக்கூட்டம் குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், இந்த தேர்தலில் ராஜஸ்தான் மாநில காங்கிரசின் ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், " கெலாட் அரசின் நலத்திட்டங்களை மக்கள் விரும்புகிறார்கள். அதேபோல், காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியினரை ஒரே அணியாக பார்க்க வேண்டுமென்றே மக்களும் விரும்புகிறார்கள்.

இரு மூத்த தலைவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன். கெலாட் மற்றும் பைலட் இருவருமே வரும் தேர்தலில் காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்றே பேசி வருகின்றனர். அதைத்தான் காங்கிரஸ் தலைமையும் விரும்புகிறது. சச்சின் பைலட் போன்ற தலைவரை இழக்க காங்கிரஸ் கட்சியினர் யாரும் விரும்பவில்லை. இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வியூகம் அமைக்கப்பட்டு, கெலாட், பைலட் இருவருக்குமே முக்கியமான பணிகள் வழங்கப்படலாம்" என்று கூறினார்.

இது தொடர்பாக அண்மையில் பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, "கட்சியை வலுப்படுத்துவதிலும், வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதிலும் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது. கர்நாடகாவில் செய்ததைப் போலவே, ராஜஸ்தானிலும் அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொள்வோம். காங்கிரசின் ஒற்றுமை தொடர்பான இந்த நல்ல செய்தியை தலைவர் கார்கே தெரிவிப்பார் என்று நம்புகிறேன்" என்றார்.

ராஜஸ்தானில் நாளை நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் கெலாட், பைலட் இடையிலான நீண்ட கால மோதலை தீர்க்குமா? என்பதை தெரிந்து கொள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் - காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியுடன் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.