ETV Bharat / bharat

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து; முதன்முறையாக சூடான உணவை அனுப்பும் மீட்புப்படை.. காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 11:13 AM IST

Uttarkashi tunnel collapse: உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தின் மத்தியில், முதல் முறையாக சூடான உணவு சமைத்து அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Uttarkashi tunnel collapse
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து

உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே சுரங்கம் அமைக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கடந்த நவம்பர் 12ஆம் தேதி காலை சுமார் 9 மணியளவில் தீடீரென சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சுரங்கத்தின் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் மூலம் ஆக்சிஜன் மற்றும் அவர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இன்றுடன் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து நடந்து 9 நாட்கள் ஆகிவிட்டது. மேலும், நேற்று (நவ.20) சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்பதற்காக, சுமார் 6 இன்ச் அகலம் உள்ள பைப்லைன் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மீட்புப்பணி பொறுப்பாளர் கர்னல் தீபக் பாட்டீல் கூறுகையில், “சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை தற்போது பொருத்தியுள்ள 900 மி.மீ பைப் மூலம் மீட்பது என்பது முக்கிய சவால் என்றாலும், இந்த முயற்சி பின்னர் செய்யப்படும். ஆனால் தற்போது, 6 இன்ச் லைப்லைன் (Lifeline) மூலம் சுரங்கப்பாதைக்குள் உணவு, செல்போன் மற்றும் சார்ஜர்கள் அனுப்பப்படும். மேலும், சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு என்னென்ன உணவுகள் அனுப்பலாம் என மருத்துவர்களின் உதவியுடன் உணவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாழைப்பழம், ஆப்பிள், கிச்சடி மற்றும் தாலியா ஆகிய உணவுகளை அனுப்பும் வகையில், நல்ல அகலமான வாய் கொண்ட பிளாஸ்டிக் உருளை பாட்டில்களை நாங்கள் கொண்டு வருகிறோம். தற்போது மீட்புப் படையினர், அதில் கிச்சடியை நிரப்பி, தொழிலாளர்களுக்கு அனுப்ப தயார்படுத்தி வருகின்றனர்" என தெரிவித்தார்.

மேலும் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு சமைக்கும் ஹேமந்த் என்பவர் கூறியதாவது, “சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு முதல் முறையாக சூடான உணவைத் தயார் செய்து வருகின்றோம். இந்த சூடான உணவு சுரங்கத்திற்குள் அனுப்பி வைக்கப்படும். தற்போது, கிச்சடியை தயார் செய்து அனுப்ப உள்ளோம். தொழிலாளர்களுக்கு கொடுக்கலாம் என பரிந்துரை செய்த உணவை மட்டுமே நாங்கள் தயார் செய்கிறோம்" என தெரிவித்தார்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது, “சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியானது வேகமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் யாராவது சம்பவ இடத்திற்கு வந்தால், அவர்களுக்கு உத்தரகாண்ட் அரசு சார்பாக பயணம், இருப்பிடம் மற்றும் உணவு ஆகிய அனைத்து செலவுகளுக்கும் ஏற்பாடு செய்யும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நபர்.. தண்ணீர் ஊற்றி மீட்ட காவல் துறையினர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.