ETV Bharat / bharat

அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

author img

By

Published : Mar 27, 2023, 7:56 PM IST

டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்
அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து மோடி சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவர் மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மார்ச் 23 ஆம் தேதி தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டது.

இந்த பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக கண்டன அறிக்கைகளையும், கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் டெல்லியின் துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ராகுல் காந்தி 30 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் மார்ச் 25 ஆம் தேதி ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டு மக்களின் ஜனநாயகத்துக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். என்னை தகுதி நீக்கம் செய்துவிட்டாலும் எனது குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது.

நான் சாவர்க்கர் அல்ல, காந்தி, காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்டது கிடையாது. நாடாளுமன்றத்தில் அதானி - மோடி நட்பு குறித்து பலமுறை கேள்வி எழுப்பினேன். ஆனால், எனது உரைக்கு பதிலளிக்கப்படவில்லை. குறிப்பாக, எனது உரை முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், தொடர்ந்து கேள்வி எழுப்புவேன் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று (மார்ச் 27) ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்ஐசியின் மூலதனம், அதானிக்கு! எஸ்பிஐயின் மூலதனம், அதானிக்கு! EPFO-ன் மூலதனமும், அதானிக்கு! மோடி - அதானி விவகாரம் அம்பலமான பிறகும் மீண்டும் பொதுமக்களின் ஓய்வூதியப் பணம் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவது ஏன்?. இதற்கு ஏன் விசாரணை இல்லை, பதில் இல்லை பிரதமரே. ஏன் இவ்வளவு பயம்?" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசு விழாவில் பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு குற்றவாளி - அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.