ETV Bharat / bharat

"திருடியதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீசார் அடித்தார்கள்" - தற்கொலை செய்த பட்டியலின இளைஞர்!

author img

By

Published : Jun 21, 2023, 12:43 PM IST

ஆந்திராவில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்தி போலீசார் தாக்கியதாகக் கூறி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் பொய் வழக்குப் போட்டு அடித்து துன்புறுத்தியதாக இளைஞர் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார்.

Dalit youth
தற்கொலை

ஆந்திரா: ஆந்திர மாநிலம், நந்தியாலாவைச் சேர்ந்த பர்வதம்மா - பிரகாசம் தம்பதியின் இளைய மகன் சின்னபாபு(22). இவர் டிரைவிங் வகுப்புக்கு சென்று வாகனங்கள் ஓட்டப் பழகி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அவர்கள் வசித்து வந்த பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று திருடு போனது.

திருட்டுச் சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி, இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் சின்னபாபு எனக்கூறி போலீசார் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த 19ஆம் தேதி காலை சின்னபாபுவை போலீசார் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. தான் திருடவில்லை என சின்னபாபு கூறியுள்ளார். ஆனால், சின்னபாபுதான் திருடன் என முடிவு செய்த போலீசார், அதனை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தி மோசமாக தாக்கியதாகத் தெரிகிறது.

பிறகு சின்னபாபுவை இரவு வீட்டிற்குச் சென்றுவிட்டு காலை வரும்படி கூறி அனுப்பியுள்ளனர். அடுத்த நாள் காலையில் எழுந்ததும், சின்னபாபு தனது தாயிடம் டிஃபன் செய்து தரும்படி கூறிவிட்டு, பல் தேய்த்துக் கொண்டே வெளியில் சென்றுள்ளார். பின்னர், நந்திப்பள்ளி அருகே சென்று, ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

சின்னபாபு தற்கொலை செய்வதற்கு முன்பு செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், "ஹாய் ஃப்ரண்ட்ஸ். நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்கும்போது நான் உயிரோடு இருப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. போலீசார் என் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிசிடிவி கேமராவில் என்னைப் போன்ற ஒரு நபர் காணப்பட்டதாக கூறினர். அது நான் இல்லை. ஆனால், போலீசார் என்னை அழைத்துச் சென்று குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கூறி அடித்தார்கள். இரவு வீட்டுக்கு அனுப்பினர். மீண்டும் காலையில் வரச் சொன்னார்கள்.

நான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டால், நான் திருடன் என்று முத்திரை குத்தப்படுவேன். நான் திருடியதை ஒப்புக்கொண்டால், அந்த பைக்கை நான் எப்படி ஒப்படைப்பது? - எங்கள் பகுதியில் உள்ள அனைவரும் என்னை திருடன் என்று நினைக்கிறார்கள். எஸ்ஐ என்னை அடித்ததோடு, எனது தாயையும், சகோதரியையும் மோசமாகத் திட்டினார்.

அம்மா என்னை மன்னித்துவிடுங்கள், சகோதரர்களே என்னை மன்னியுங்கள்" என்று கூறியுள்ளார். இளைஞர் சின்னபாபு தற்கொலை தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சின்னபாபுவின் தாயார் முதலில் போலீசார் தாக்கியதால் மகன் தற்கொலை செய்ததாகக் கூறிய நிலையில், பின்னர் மாற்றிக் கூறியுள்ளார். தனது மகன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். போலீசாரின் அச்சுறுத்தல் காரணமாகவே சின்னபாபுவின் தாயார் இவ்வாறு மாற்றிக் கூறியதாக கூறப்படுகிறது.

இளைஞர் சின்னபாபு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், போலீசார் திருட்டு வழக்குப் போட்டதாகவும், ஏற்கனவே இதேபோல் குறிப்பிட்ட காவல்நிலைய போலீசார் அச்சுறுத்தியதில் அப்துல் சலாம் என்பவரது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சின்னபாபு தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: தேர்வு தோல்வியால் விரக்தி - ஆந்திராவில் 9 மாணவர்கள் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.