ETV Bharat / bharat

Cyclone Biparjoy: ரூ.8,000 கோடி மதிப்பில் 3 பேரிடர் மேலாண்மை திட்டங்கள் - அமித்ஷா அறிவிப்பு!

author img

By

Published : Jun 13, 2023, 9:58 PM IST

பிப்பர்ஜாய் புயலை எதிர்கொள்வது தொடர்பாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பேரிடர் மேலாண்மைக்கான மூன்று திட்டங்களை அமித்ஷா அறிவித்தார்.

Cyclone Biparjoy
அமித்ஷா

டெல்லி: தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல் (Cyclone Biparjoy), அதிதீவிர புயலாக வலுவடைந்து, நேற்று (ஜூன் 12) குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு 320 கிலோமீட்டர் தென்மேற்கில் நிலை கொண்டிருந்தது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இது நாளை வரை நகர்ந்து வரும் 15ஆம் தேதி மாலை குஜராத்தில் கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் ஜகாவ் துறைமுகம் அருகே கரையைக் கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பிப்பர்ஜாய் புயல் இன்று மிக தீவிர புயலாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் வரும் 15ஆம் தேதி புயல் கரையைக் கடக்கும்போது, கட்ச், துவாரகா, ஜாம்நகர், போர்பந்தர், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், 15ஆம் தேதி குறிப்பிட்ட மாவட்டங்களில் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பிப்பர்ஜாய் புயலை எதிர்கொள்வதற்காக அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கண்காணிப்புக்காக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிப்பர்ஜாய் புயலை எதிர்கொள்வது தொடர்பாக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் குஜராத்தில் புயலால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களைச் சேர்ந்த எம்பிக்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பிப்பர்ஜாய் புயலை எதிர்கொள்வதற்கான மாநிலங்களின் தயார்நிலை குறித்தும், மாநிலங்களின் பேரிடர் மேலாண்மை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பேரிடர் மேலாண்மைக்கான 3 திட்டங்களை அமித்ஷா அறிவித்தார். அதன்படி, ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் மாநிலங்களில் தீயணைப்புத்துறை நவீனப்படுத்தப்படும், நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்க மும்பை, சென்னை, கொல்கத்தா பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், புனே ஆகிய ஏழு பெருநகரங்களுக்கு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலச்சரிவைத் தடுக்க 825 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இதையும் படிங்க: Cyclone Biparjoy: தீவிர நிலையில் 'பிப்பர்ஜாய் புயல்' - பல ரயில்களின் சேவை ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.