ETV Bharat / bharat

தமிழகத்திற்கான நீரை 5,000-லிருந்து 3,000 கன அடியாகக் குறைத்தது காவிரி ஒழுங்காற்றுக் குழு!

author img

By ANI

Published : Sep 26, 2023, 6:04 PM IST

Cauvery Water Management Authority Meeting: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டத்தில், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை 3,000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

cwrc-asks-karnataka-to-ensure-3000-cusecs-of-cauvery-water-release-from-sept-28-to-oct-15
தமிழகத்திற்கான தண்ணீரை 5,000லிருந்து 3,000 கன அடியாகக் குறைத்தது காவிரி ஒழுங்காற்று குழு

டெல்லி: தமிழ்நாட்டிற்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று (செப்.26) நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை 3,000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (CWRC) 87வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அதிகாரிகள் மற்றும் கர்நாடகா அதிகாரிகள் காணொளிக் காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கர்நாடகா தரப்பில், செப்டம்பர் 25ஆம் தேதி வரை நான்கு நீர்த்தேக்கங்களிலும் மழை பற்றாக்குறை காரணமாக 53.04 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும், செப்டம்பர் 13ஆம் தேதி நிலவரப்படி மாநில அளவில் 161 தாலுகாவில் தண்ணீர் இல்லாமல் முழுமையாக வறட்சியால் பாதிக்கப்பட்டதாகவும், 34 தாலுகா மிதமான வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 32 தாலுகா மிக அதிகமான வறட்சியைச் சந்தித்து உள்ளதாகவும், 15 தாலுகா மிதமான வறட்சியைச் சந்தித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.

இதையும் படிங்க: சிறுதானிய உணவுத் திருவிழா: 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து அசத்திய கல்லூரி மாணவிகள்!!

தமிழ்நாடு அரசு தரப்பில், ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 123.14 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், இதுவரை 40 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளன. எனவே, காவிரியிலிருந்து வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீர் திறந்து விட பரிந்துரை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டன.

காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி, கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என்றால், மீண்டும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு முறையிட வேண்டும் என்ற நிலை உள்ளது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவிக்கும்போது, ஜனதா தளம் (மதச்சார்பற்ற) மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் இணைந்து காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என அரசியல் காரணங்களுக்காகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்கள் மக்களுக்கானது அல்ல.

காவிரி தண்ணீர் பங்கீடு தொடர்பாக முறையான அளவீடுகளை வகுக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நேரத்தில், பங்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சரியான வரையறையை வகுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என போராட்டங்கள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. அதேபோல், தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லை என போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 3 மாவட்டங்களில் செப்.30 கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.