ETV Bharat / bharat

கரோனா தொற்றால் மாணவர்களின் கற்றல் அடைவுதிறன் குறைவு - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!

author img

By

Published : May 27, 2022, 5:06 PM IST

கரோனா தொற்றால் மாணவர்களின் கற்றல் அடைவுதிறன் குறைந்துள்ளதாக ஆய்வின் முடிவில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா தொற்றால் மாணவர்களின் கற்றல் அடைவுதிறன் குறைவு - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!
கரோனா தொற்றால் மாணவர்களின் கற்றல் அடைவுதிறன் குறைவு - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!

டெல்லி: கடந்த நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் கற்றல் அடைவு திறன் குறித்து தேசிய அளவில் மத்திய கல்வி அமைச்சகம் ஆன்லைன் மூலம் ஆய்வு நடத்தியது. இதற்காக மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் கடந்த ஆண்டு இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழ்நாட்டில் உள்ள 4,145 பள்ளிகளில் 19,100 ஆசிரியர்களிடமும், 1,26,253 மாணவர்களிடம் இருந்தும், மொழிப்பாடம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியப் பாடங்களில் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் முன்னிலை: அதிலும் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த தேர்வானது நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கணித பாடத்தில் ஆயிரம் எண்கள் வரை எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாகும். ஏனென்றால் தமிழ்நாடு மாணவர்களின் சராசரி 46 விழுக்காடாகவும், தேசிய சராசரி 45 விழுக்காடாகவும் உள்ளது.

மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தில் புரிந்து கொள்வதிலும் எழுதுவதிலும் சிக்கலான வார்த்தைகளை அறிந்து வைத்திருப்பதிலும் தேசிய சராசரிக்கு இணையாக உள்ளனர். அந்த வகையில் தேசிய சராசரியான 43 விழுக்காட்டை, தமிழ்நாடு மாணவர்கள் எட்டியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தமிழ்நாட்டின் சராசரி, தேசிய சராசரியைக்காட்டிலும் அதிகமாக உள்ளது. வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வரலாற்றின் கால நிகழ்வுகளை வேறுபடுத்துவதில் தமிழ்நாடு மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் சராசரி 38 விழுக்காடாகவும், தேசிய சராசரி 37 விழுக்காடாகவும் உள்ளது.

கரோனா தாக்கம்: அதேநேரம், 10ஆம் வகுப்பில் 16% மாணவர்கள் மட்டுமே தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை, எண்களைக் கொண்டு தீர்ப்பதில் முன்னிலைப் பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு மாணவர்களுள் அறிவியல் பாடத்தில் 85 விழுக்காடு தமிழ்நாடு மாணவர்கள், அடிப்படை அறிவியல் அறிவில் குறைவாக உள்ளனர். இதனால், 13 விழுக்காட்டினர் மட்டுமே அடிப்படை அறிவியல் பாட அறிவை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

5ஆம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரையில், 33 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே மொழிப்பாடத்தில் எழுதப் படிக்கும் வகையில் திறன் பெற்று உள்ளனர். 27 விழுக்காடு மாணவர்கள் சுற்றுப்புறச்சூழல் அறிவியல் பாடத்திலும்; 21 விழுக்காடு மாணவர்கள் கணிதப் பாடத்திலும் திறன் பெற்றவர்களாக உள்ளனர். இம்மாதிரியான மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் குறைந்ததற்கு கரோனா தாக்கம் காரணமாக அமைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு - மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.