ETV Bharat / bharat

அதானி குழும கடன் தகவல்களை வெளியிட முடியாது - அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

author img

By

Published : Mar 13, 2023, 2:13 PM IST

பொதுத் துறை வங்கிகளிடம் அதானி நிறுவனம் பெற்ற கடன் விபரங்களை வெளியிட முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு இன்று தொடங்கியது. நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதானி குழுமம் மீதான அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் தாக்கல் செய்த ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தன. அதானி குழும விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நாடாளுமன்றம் சாதாரண நிலையை எதிர்கொண்டது.

தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமா் மோடி பதில் அளித்தாா். தொடர்து பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடரின் முதல் கட்ட அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது. கூட்டத்தில் எதிர்கட்சி எம்.பி. தீபக் பாய்ஜ், பொதுத் துறை வங்கிகளில் அதானி குழுமம் பெற்று உள்ள கடன் விவரங்கள் குறித்து தகவல் அளிக்குமாறு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பொதுத் துறை வங்கிகளிடம் அதானி நிறுவனம் பெற்ற கடன் விபரங்களை வெளியிட முடியாது என்று கூறினார். இது குறித்து எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 பிரிவு 45E- யின் படி, ஒரு நிறுவனம் பெற்று உள்ள கடன் விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளது என்றார்.

45E சட்டப் பிரிவின் படி வங்கியால் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விவரங்களை பொது வெளியில் வெளிப்படுத்தவோ, வெளியிடவோ தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதேநேரம் அதானி நிறுவனத்திற்கு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. வழங்கிய கடன் 6 ஆயிரத்து 347 கோடி ரூபாய் வரை உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அதேநேரம் மற்ற 5 பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் அதானி குழுமத்திற்கு கடன் வழங்கவில்லை என தெரிவித்து உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி அமளி - நாடாளுமன்றம் முடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.