ETV Bharat / bharat

மகாராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் நர்வேகர் தேர்வு - அறிய வேண்டிய 10 பாயின்ட்ஸ்..!

author img

By

Published : Jul 3, 2022, 5:37 PM IST

மகாராஷ்டிரா சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராகுல் நர்வேகர், 164 வாக்குகளைப் பெற்று சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Rahul
Rahul

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ள நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 3) சபாநாயகரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராகுல் நர்வேகர், 164 வாக்குகளைப் பெற்று சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வாக்கெடுப்பு குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 குறிப்புகளை இப்போது காண்போம்...

  1. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய ஆட்சியில், சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 288 வாக்குகளில், பாஜகவின் நர்வேகர் 164 வாக்குகளைப் பெற்றார். உத்தவ் தாக்கரே அணியில் போட்டியிட்ட சிவசேனா எம்எல்ஏ ராஜன் சால்வி 107 வாக்குகள் பெற்றார்.
  2. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்டது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்னதாகவே வருகை தந்தனர். காலை 11 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
  3. மகாராஷ்டிராவில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், நர்வேகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 16 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கை ரத்து செய்வதற்கான உரிமையை தற்போது நர்வேகர் பெற்றுள்ளார். இதனால், ஷிண்டே - பாஜக கூட்டணிக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை- மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆதிக்கம் செலுத்தும்.
  4. மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் ஷிண்டே பக்கம் இருப்பதால், அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், ஷிண்டே அதிகாரப்பூர்வமாக சிவசேனா கட்சி சின்னத்திற்கு உரிமை கோர முடியும். நாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று ஷிண்டே உரிமை கோர முடியும். இதனால் சிவசேனா யாருக்குச் சொந்தம் என்பதை நிர்ணயிப்பதில் நர்வேகரின் பங்கு முக்கியமானது.
  5. கடந்த சட்டப்பேரவை சபாநாயகர் நானா படோல், தனது சொந்தக் கட்சியான காங்கிரஸின் மாநிலப் பிரிவுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்காக, பிப்ரவரி 2021இல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்றிலிருந்து அந்த பதவி காலியாக இருந்தது. துணை சபாநாயகர் நர்ஹரி ஷிர்வால், சபாநாயகர் பணிகளை செய்ய முடியும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருந்தார்.
  6. பரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிர சட்டப்பேரவை சிறப்பு அமர்வு இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த சிறப்பு அமர்வில், நாளை ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
  7. சிவசேனாவின் 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட ஷிண்டேவை ஆதரிக்கும் 50 எம்எல்ஏக்கள் நேற்று(ஜூலை 2) மாலை கோவாவில் இருந்து மும்பை சென்றனர். அங்கு ஒரு சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
  8. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஷிண்டேவை சிவசேனாவிலிருந்து நீக்கி, கடந்த 1ஆம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகு ஷிண்டே அணியினர், நாங்கள்தான் உண்மையான சிவசேனா என்ற முழக்கத்துடன் களத்தில் இறங்கினர்.
  9. இதனிடையே மும்பை விதான் பவனில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகம், மூடப்பட்டிருந்தது. அதில், "சிவசேனா கட்சியின் அறிவுறுத்தலின்படி இந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது" என்று மராத்தி மொழியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
  10. புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பிறகு, சிவசேனா கட்சி யாருடையது என்பதை சுற்றியே அரசியல் மோதல் உள்ளது.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவின் சபாநாயகர் ஆகிறார் பாஜகவின் ராகுல் நர்வேகர் - 164 வாக்குகள் பெற்று வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.