ETV Bharat / bharat

மீண்டும் ஆப்பரேஷன் கமலா - கமல்நாத் ஆட்சியைக் குறிவைக்கும் பாஜக

author img

By

Published : Mar 4, 2020, 10:53 AM IST

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் திட்டத்தில், 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களை வலைவீசிப் பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

BJP
BJP

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக வீழ்த்தி, 230 இடங்களில் 118 இடங்களைப் பெற்று காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.

கமல் நாத் தலைமையிலான ஆட்சிக்கு தலைவலி ஏற்படுத்தும்விதத்தில், பாஜக தற்போது அதிரடி செயலில் இறங்கியுள்ளது. காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுமார் 10 பேர் தற்போது ஹரியானாவில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளதாகவும், இவர்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும்விதமாக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பைஜ்நாத் குஷ்வானா, தன்னிடம் சில பாஜகவினர் தொடர்புகொண்டு ஐந்து கோடி ரூபாய் தருவதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படத் தூண்டியதாகக் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் சட்டப்பேரவை அதிருப்தி உறுப்பினர்கள் பலர் மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு திரும்பிவருவதாகவும், பாஜகவின் இந்த முறையற்ற வேலைகள் மத்தியப் பிரதேச காங்கிரசிடம் எடுபடாது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய்சிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆப்பரேஷன் கமலா மூலம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை தங்கள் வசம் இழுத்து ஆட்சிக் கவிழ்ப்பை பாஜக நடத்தியது. தற்போது காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலத்திலும் இது போன்ற நடவடிக்கையில் பாஜக ஈடுபடுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பரபரப்பான சூழலில் அமைச்சரவை கூடுகிறது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.