ETV Bharat / bharat

இந்திய-சீன மோதலை தணிப்பதற்கு ரஷ்யாவின் பங்கு முக்கியம்!

author img

By

Published : Jun 24, 2020, 10:15 AM IST

Updated : Jun 24, 2020, 10:59 AM IST

டெல்லி: 'இந்தியாவுடன் போர்த்திறன் கூட்டுறவில் இருப்பதால் இந்தியா பின்னடைவதை ரஷ்யா விரும்பாது, அதே நேரம் உலகின் சக்திவாய்ந்த ஒரே நாடாக சீனா இருப்பதையும் ரஷ்யா விரும்பவில்லை' என்று பாதுகாப்புத் துறை வல்லுநர் க்வாமர் அகா தெரிவித்துள்ளார்.

Indo- China conflict  Qamar Agha  Indo- Pacific region  Doklam crisis.  Chandrakala Choudhury  இந்திய- சீன எல்லைப் பிரச்னை  எல்லைப் பிரச்னை முத்தரப்பு பேச்சுவார்த்தை  டோக்லாம்  எல்லைப் பிரச்னை
எல்லைப் பிரச்னை: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய அங்கம் வகிக்கும் ரஷ்யா

இந்திய-சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பிலும் ஏற்பட்ட மோதலை அடுத்து, இந்தியா-சீனா-ரஷ்யா இடையிலான காணொலி வாயிலாக நேற்று (ஜூன் 23) நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

இந்தியாவுடன் நட்புறவாகவும் சீனாவைக் கட்டுப்படுத்தும் சக்தியாகவும் இருப்பதால், இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா மிக முக்கியமான அங்கமாக இருக்கும் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னதாக பாதுகாப்புத் துறை வல்லுநர் க்வாமர் அகா நமது ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார்

"இதற்கு முன்னர் டோக்லாம் சர்ச்சைக்கான தீர்வில், ரஷ்யா சிறப்பாகச் செயல்பட்டது. இந்தியாவிடம் மோதல்போக்கை கைவிட்டு, டோக்லாம் பகுதியிலிருந்து திரும்புமாறு சீனாவை ரஷ்யா வலியுறுத்தியது. இந்தியாவுடன் போர்த்திறன் கூட்டுறவில் இருப்பதால் இந்தியா பின்னடைவதை ரஷ்யா விரும்பாது, அதே நேரம் உலகின் சக்திவாய்ந்த ஒரே நாடாக சீனா இருப்பதையும் ரஷ்யா விரும்பவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தெற்காசியாவில் மட்டுமின்றி, இந்திய – பசிபிக் பிராந்தியத்திலும் இந்தியா மிக முக்கிய நாடாக கருதப்படுகிறது, அதனால் சமநிலையான போக்கை இந்தியா கையாள வேண்டும். அமெரிக்காவுடன் நல்லுறவையும், ரஷ்யாவுடன் கூட்டுறவையும் கொண்டிருக்கும் அதே வேளையில் சீனாவுடன் பகைமை பாராட்டுவதை எதிர்காலத்தில் இந்தியா தவிர்க்க வேண்டும்.

தற்போது இந்தியாவுடன் போரில் ஈடுபட்டால் மோசமான பொருளாதார நிலையை அடைய வேண்டியிருக்கும் என்பதால், எல்லையில் மோதல் போக்கை கடைப்பிடித்து, தனது நாட்டில் தேசியவாதத்தை நிலைநாட்ட சீனா முயற்சிக்கும்.

இந்தப் பரபரப்பான சூழலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு 24ஆம் தேதி நடக்கும் அணிவகுப்பில் கலந்துகொள்ளும் அவர், ரஷ்ய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யா நம்பிக்கை மிகுந்த நண்பன். அத்துடன் இரு நாடுகளுடனும் தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதனால் சீன விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் என்று, இந்தியா நம்புகிறது.

1975 முதல் இன்றுவரை இருதரப்பிலும் நடந்த மோதல்களில் மோசமானதாக அமைந்தது, ஜூன் 15ஆம் தேதி நடந்த மோதல். இதில் இந்திய தரப்பில் படைப்பிரிவுத் தலைவர் உள்பட 20 பேர் வீரமரணமடைந்தனர். கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்தே, 3,500 கி.மீ. நீள உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் இருதரப்பும் மோதிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நாம் சீனாவை நம்பினோம், ஆனால் சீனா நம்மை நம்பவைத்து ஏமாற்றிவிட்டது. கட்டுப்பாட்டுடன் இருக்க அவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டோம். சீனாவை நம்பிய நமக்கு, முன்பைப் போலவே அந்நாடு துரோகம் செய்துவிட்டது. சீனா வளமான நாடாக இருக்கலாம், ஆனால் உலகளவில் அதற்கு ஆதரவு இல்லை.

சீனாவுக்கு பெரிய ஆதரவு அளிப்பது பாகிஸ்தான், வடகொரியா மட்டுமே. மற்ற நாடுகளுடன் வர்த்தக உறவு மட்டுமே வைத்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கு ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுடன் வலுவான உறவு உள்ளது. இந்தியா மீது இந்த நாடுகளுக்கு சிறந்த அபிமானம் உண்டு" என்றும் கூறினார்.

"கரோனா பாதிப்புகளுக்குப் பின் சீனா பலம் மிகுந்த நாடாக உள்ளது. மேலும், சக்திவாய்ந்த நாடாக உருவெடுக்கவுள்ள சீனாவின் முக்கிய நோக்கம், அமெரிக்காவுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்பதே. ஆசியாவில் உள்ள சக்திவாய்ந்த நாடாக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சீனாவுக்கு, மிகப்பெரிய போட்டியாக இந்தியா இருப்பதால் தொல்லைகள் கொடுக்கிறது.

பாகிஸ்தானும், சீனாவும் ஒரே நேரத்தில் இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. ஜம்மு காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானும், லடாக் பகுதியை சீனாவும் ஆக்கிரமிக்கும் செயல்களை அதிகரித்துவருகின்றன. தற்போது உத்தரகாண்ட், பிற எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தினரை நிலைநிறுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலின் எதிரொலியாக, அணு ஆயுத பலம் பொருந்திய இருநாடுகளிடையே பதற்றமான சூழல் உருவானது. இந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இருநாட்டு ராணுவ கமாண்டர்களும் கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லைப் பகுதியில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

(ஆனால் ராணுவ துணைத் தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டு இரு துருப்புகளும் எல்லையிலிருந்து விலக்கிக்கொள்ள முடிவாகியுள்ளது.)

கமாண்டர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை குறித்து க்வாமர் அகா, "இதுபோன்ற சந்திப்புகளால் அடுத்தகட்ட நகர்வைத் தடுத்து, எல்லையில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஆனால், ஏற்கனவே போடப்பட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீனா மீறியதால்தான் நம் தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனால் இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சக அளவில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும்.

அதுமட்டுமின்றி, தற்போதுள்ள மந்தமான பொருளாதார சூழலில் படைகளைக் குவிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். எனவே அதிகார மட்டத்தில்தான் இதற்குத் தீர்வு காண வேண்டும், அத்துடன் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, பாகிஸ்தான் எல்லையில் மேற்கொண்ட கொள்கையைப் போலவே ராணுவத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கிய இந்திய வெளியுறவுத் துறை, கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் உரிமை கோரலை நிராகரித்தது. அண்டை நாட்டிற்குள் மிகைப்படுத்திய, ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைக் காட்டி ஊடுருவுவதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இதையும் படிங்க: சீன விவகாரம்: கேள்விக் கேட்டால் தேசத்துரோகமா?- ப.சிதம்பரம்

Last Updated : Jun 24, 2020, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.