ETV Bharat / bharat

ஏஐசிசி கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்திய சச்சின் பைலட் ஆதரவாளர்கள்!

author img

By

Published : Sep 9, 2020, 8:35 PM IST

டெல்லி : புதிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) பொதுச் செயலாளரும், ராஜஸ்தான் பொறுப்பாளருமான அஜய் மேக்கன், அஜ்மீர் பிரிவின் காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்துரையாட நடத்திய கூட்டத்தில் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர்.

aicc
ic

புதிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) பொதுச் செயலாளரும், ராஜஸ்தானின் பொறுப்பாளருமான அஜய் மேக்கன், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில், அஜ்மீர் பிரிவின் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாடினார்.

அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களால் சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக அவர்கள், மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் ரகு ஷர்மாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பத் தொடங்கியதால், வாக்குவாதங்கள் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர், நிலைமையைக் கட்டுபடுத்தி சிலரை மட்டும் போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.

இது குறித்து மசூதா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராகேஷ் பரீக் கூறுகையில், "எங்கள் கட்சி உறுப்பினர்கள் காரணம் இல்லாமல் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சத்தியாகிரகம் காங்கிரஸ் கட்சியின் பிறப்புரிமை. யாரையாவது தடுத்து வைப்பதற்கு இது ஒருபோதும் காரணமல்ல” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, முதலமைச்சர் அசோக் கெலாட் தனது அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டபோது, பிரச்னைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவில் மேக்கனும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.