ETV Bharat / bharat

ஒரு வருடத்தை நிறைவு செய்த மோடி 2.0: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்

author img

By

Published : May 31, 2020, 11:33 AM IST

Updated : May 31, 2020, 1:26 PM IST

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், குடிபெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள், தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணம், பொருளாதார மறுமலர்ச்சிக்கான பாதை உள்ளிட்டவை குறித்து நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

2014ஆம் ஆண்டைத் தொடர்ந்து சென்ற 2019ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று, முதல் ஆண்டு நிறைவு செய்துள்ளதை அடுத்து, நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.

அதில் கரோனாவுக்கு எதிரான நீண்டகால போரில், இந்தியா வெற்றிக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், குடிபெயர் தொழிலாளர்கள் மிகப்பெரிய துன்பங்களை சந்தித்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

சாதாரண சூழ்நிலை என்றால் தான் மக்கள் மத்தியில் இருந்திருப்பதாகவும், ஆனால், தற்போதைய கரோனா சூழல் அதனை அனுமதிக்கவில்லை என்றும், தான் மக்களுக்கு கடிதம் எழுதுவதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.

வரலாற்று முடிவுகள் :

”தங்களது அரசாங்கம் வரலாற்று முடிவுகளை எடுத்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்தியா வேகமாக முன்னேறியுள்ளது. எனினும், இந்தியா சந்தித்து வரும் பிரச்னைகள், சவால்கள் குறித்து நிறைய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

நான் இரவும் பகலும் உழைக்கிறேன். என்னிடம் குறைபாடுகள் இருக்கக்கூடும், ஆனால் நம் நாட்டில் இல்லாதது என்று எதுவும் இல்லை. நான் மக்களாகிய உங்களை நம்புகிறேன், உங்கள் பலம், திறன்களை என்னைவிட அதிகம் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

குடிபெயர் தொழிலாளர்கள் :

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தனது ஒற்றுமையாலும் உறுதியாலும் உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் இதேபோல் பொருளாதார மறுமலர்ச்சியிலும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.

நாட்டின் கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு தொழில் செய்யும் கைவினைக் கலைஞர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் கஷ்டங்களைப் போக்க நாங்கள் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்.

கரோனாவை பேரழிவாக மாற்றாதீர்கள் :

தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பொறுத்துக்கொள்ளுங்கள், இந்த சூழலை பேரழிவாக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தியர்கள் ஒவ்வொருவரும் அனைத்து விதிகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவது முக்கியம். இதுவரை மக்கள் விதிகளைத் தவறாமல் பின்பற்றியுள்ளீர்கள், இதைத் தொடர வேண்டும்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா பாதுகாப்பானதாகவும், பல நாடுகளை விட சிறப்பாக செயல்படுவதற்கும் இது ஒரு முக்கிய காரணம். இது ஒரு மிக நீண்ட யுத்தம், நாம் இதில் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மறுமலர்ச்சி :

கரோனாவிற்கு பிந்தைய உலகைப் பற்றி பேசியுள்ள பிரதமர் மோடி, ”இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் எவ்வாறு மீட்கப்படும் என்பது குறித்து பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும், கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தனது ஒற்றுமை, உறுதியால் உலகை ஆச்சரியப்படுத்தி வருவது போலவே, பொருளாதார மறுமலர்ச்சியிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்,

தற்சார்பு இந்தியா :

”நமது சொந்த திறன்களின் அடிப்படையில், நம் சொந்த வழியில் நாம் முன்னேற வேண்டும், அதைச் செய்ய இருக்கும் ஒரே வழி ஆத்மனிர்பார் பாரத் அல்லது தற்சார்பு இந்தியா.

தற்சார்பு இந்தியாவை நோக்கிய முயற்சிகள் அனைத்தும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும், 130 கோடி மக்களைக் கொண்ட நாமே நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் முடிவு செய்யவுள்ளோம். வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறிச் சென்று வெற்றியை நமதாக்குவோம்.

ஒரு கையில் கடமையை செயலாற்றினால் மறு கையை வெற்றி நிச்சயம் வந்தடையும்” என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்தின் சாதனைகள்:

நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட்டு சில முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

முதன்முறையாக நகர்ப்புறங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் இணையம் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் இந்திய ஜனநாயக வரலாற்றின் சிறப்பு வாய்ந்த பகுதி, இதே நாளில் ஆரம்பமானது. மக்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு முழு பெரும்பான்மையுடன் ஒரு அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மக்கள் இந்தியாவை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் கனவுடன் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அவற்றை நிறைவேற்றும் வகையிலேயே கடந்த ஒரு வருடமாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

பெரிதும் விவாதிக்கப்பட்ட எங்கள் அரசின் முடிவுகளில் ஒன்றான பிரிவு 370 ரத்து, தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்பு என்ற உணர்வுகளை வளர்த்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தால் ஒருமனதாக வழங்கப்பட்ட ராமர் கோயில் தீர்ப்பு, பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் ஒரு விவாதத்திற்கு இணக்கமான ஒரு முடிவைக் கொடுத்தது.

காட்டுமிராண்டித்தனமான நடைமுறையான முத்தலாக் துடைத்தெறியப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்த சட்டம் இந்தியாவின் இரக்க குணம், அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய செயல்பாடுகள் ஆகியவற்றின் வெளிப்பாடு ஆகும்

’ஜன் சக்தி’, ‘ராஷ்டிர சக்தி’ ஆகிய திட்டங்கள் நாடு முழுவதும் ஒளி ஏற்றியுள்ளன. இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மோடி 2.0: ஓராண்டு ஆட்சிக் காலத்தில் கண்டதும்... கொண்டதும்...

Last Updated : May 31, 2020, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.