ETV Bharat / bharat

கோவிட் பெருந்தொற்று காலத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பங்களிப்பு

author img

By

Published : Aug 15, 2020, 10:06 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பங்களிப்பு குறித்து மும்பையைச் சேர்ந்த இந்திராகாந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் துணைவேந்தர் எஸ்.மகேந்திர தேவ் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்...

Rural
Rural

இந்தாண்டு, இந்தியாவின் சுதந்திர தினம் வழக்கத்துக்கு மாறான ஒன்றாக இருக்கிறது. கரோனா வைரஸ் இன்னும் நாடு முழுவதும் பரவிவருகிறது. உலகின் பிற நாடுகளைப் போலவே இந்த பெருந்தொற்று வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதித்திருக்கிறது. இரண்டு காரணங்களால் பொருளாதார சரிவு என்பது இந்தியாவில் மிகவும் கடுமையானதாக இருக்கிறது.

முதலாவதாக கோவிட் 19-க்கு முன்பு பரவலான சமத்துவமின்மை, கிராமங்களில் பாதிப்பு, குறைவான வருவாய், வேலைவாய்ப்பு இன்மை போன்ற சிக்கல்கள் ஒருங்கிணைந்து அதிகரித்ததால் ஏற்கனவே பொருளாதார மந்த நிலை என்பது 207-18-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 8.1 சதவிகிதம் என்று இருந்தது 2019-20 நான்காவது காலாண்டில் 3.1 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. இரண்டாவதாக, குறிப்பாக இந்தியாவின் பெரிய அமைப்புசாரா துறை பாதிக்கப்படக்கூடியதாக இருந்தது.

பெருந்தொற்று காரணமாக தொழிலாளர் சந்தையில் முன் எப்போதும் இல்லாத வகையில் சரிவு ஏற்பட்டது. பொது ஊரடங்கானது, ஏறக்குறைய அனைத்து பொருளாதார செயல்பாடுகளையும் மூச்சு திணறவைத்து விட்டது. பொருளாதார பிரமிடில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், புலம் பெயர் தொழிலாளர்கள்தான் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த பெருந்தொற்று முறைச்சாரா தொழிலாளர்களுக்கான வருவாய் மற்றும் வேலைவாய்ப்பில் பரவலான இழப்பை ஏற்படுத்தியது. வேலையின்மை விகிதம் என்பது மார்ச் மாதம் 8.4 சதவிகிதமாக இருந்தது. இது 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 27 சதவிகிதமாக அதிகரித்தது. 122 மில்லியன் வேலை இழப்புகள் ஏற்பட்டன. அதிலும் குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் (தினக்கூலி தொழிலாளர்கள்) 91 மில்லியன் வேலைவாய்ப்புகளை இழந்தனர்.

ஜூன் மாதத்தில் இருந்து நாட்டின் பல பகுதிகளில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால், ஓரளவுக்கு பொருளாதாரத்தில் வாழ்வாதாரத்திலும் முன்னேற்றம் தெரிந்தது. ஆனால், அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் இன்னும் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. பெருந்தொற்றின் பரவல் மற்றும் நீடித்திருக்கும் காலம் குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. மொத்த மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேரும், பணியாட்களும் கிராமப்பகுதிகளில் வசிப்பதால் கிராம பொருளாதாரத்தின் செயல்பாடு என்பது முக்கியம் வாய்ந்ததாகும். அவர்களின் வாங்கும் சக்தி என்பது ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் தேவையை உருவாக்கும் என்பதால், அது முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நகர்புற பகுதிகளை விடவும் , கிராமபுறங்களில் கோவிட் 19 மிகவும் குறைவான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஊரடங்குக்குப் பின்னர் கிராமப்புற பொருளாதாரம் புத்துயிர் பெற்று விட்டது என்றே தகவல்கள் வருகின்றன.

இப்போது இந்திய பொருளாதாரம் விவசாயத்துறையின் செயல்பாடுகள் காரணமாக மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையாகும். 2021-ம் நிதியாண்டில் விவசாயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5 முதல் 3 சதவிகிதமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 முதல் 8 சதவிகிதமாக சுருங்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

வழக்கமான பருவமழை காரணமாக காரீப் மற்றும் ரவி பருவங்களில் வெற்றிகரமான பயிர்விளைச்சலுக்கான வாய்ப்புகள் இருக்கும் என்று தெரிகிறது. எனினும் அதிக விளைச்சல் காரணமாக வேளாண் பொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படும். விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச விலை கிடைக்க வேண்டும் என்றால், விநியோக தொடர்பு பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். மேலும், கிராமப்புறங்களில் விவசாயத்துறை என்பது ஒரு பகுதி கதை மட்டும்தான்.

பண்ணைசாராத துறை காலப்போக்கில் அதிகரித்திருக்கிறது. கிராமப் பகுதிகளில் அதிகமாக விற்கும் நுகர்வு பொருட்கள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கான தேவைகள் அதிகரித்திருக்கிறது. எனினும், இந்த கிராமபுற மறுமலர்ச்சி என்பது, ஒரு உயர்ந்த தேவை என்பதால் முழு ஊரடங்குக்குப்பிறகு மிகைப்படுத்தப்பட்டுள்ளது. குறைவான கிராம கூலி மற்றும் வருவாய், குறைவான வழங்கல்கள் ஆகியவற்றின் காரணமாக காலப்போக்கில், இந்தத்தேவை என்பது நீடித்திருக்காது.

தலைகீழ் இடப்பெயர்வின் ஒரு பகுதியாக சராசரியாக 40 முதல் 50 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமப்பகுதிகளுக்கு திரும்பியிருக்கின்றனர். இந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் இதர கிராமப்புற ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. ஊழியர்களுக்கான பாதுகாப்பு வலையமாக பொதுப் பணிகள் உபயோகிக்கப்படுகின்றன.

இந்தியாவில் நான்காம் நூற்றில் இருந்து பண்டைய கால இந்திய அரசியல் பொருளாதார வல்லுநர் கவுடல்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில், பொது நிவாரணப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் இந்த கோவிட் 19 பெருந்தொற்று காலகட்டத்தில் இந்த ஊழியர்களுக்கான மீட்பராக இருக்க முடியும். தவிர இந்தத் திட்டம் பஞ்சாயத்துகளை பங்கெடுக்க செய்தல், தொழிலாளர்கள் புலம்பெயர்தலை குறைத்தல், ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு உதவுதல், பெண்களை அதிக அளவில் பங்கேற்க செய்தல், கிராம முன்னேற்றம், விவசாயத்துக்கான சொத்துகளை உருவாக்குதல் உள்ளிட்டவை போன்ற இரண்டாம் நிலை நன்மைகளை கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட சொத்துகள் குறித்து இந்திரா காந்தி வளர்ச்சி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியில், 87 சதவிகித வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன மற்றும் செயல்பாட்டில் இருக்கின்றன என்பது தெரியவந்தது. இதில் 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பணிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழான வேளாண்மையோடு தொடர்புடையதாக இருக்கின்றன. 90 சதவிகிதம் பேரில் பெரும்பாலானோர் இந்தப் பணிகள் மிகவும் பயனுள்ளதாகவும் அல்லது ஓரளவு பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பொது ஊரடங்கு மற்றும் வேலை இழப்புகள் காரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்துக்கு கடந்த சில மாதங்களாக தேவை அதிகரித்திருக்கிறது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மா த்தின் முதல் வாரம் வரை 170 கோடி மனித நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 2019-20-ம் ஆண்டில் ஒரு முழு ஆண்டிலும் 265 கோடி மனித வேலைநாட்கள்தான் உருவாக்கப்பட்டது.

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆண்டின் 64 சதவிகித மனித வேலை நாட்கள், இந்த ஆண்டில் தேவையின் காரணமாக சில மாதங்களிலேயே உருவாக்கப்பட்டது. கடந்த மூன்றரை மாதங்களில், தெலங்கானா, ஆந்திரா பிரதேச மாநிலங்களில் முறையே 106 சதவிகிதம் 96 சதவிகிதம் மனித நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனோடு ஒப்பிடும் போது 2019-20-ம் ஆண்டில் 365 நாட்களில் பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பணிக்கான தளங்கள் இல்லாததன் காரணமாக கிராமமக்கள் இந்த திட்டத்தில் வேலை செய்வதற்காக திரண்டு வருகின்றனர் என்பதன் மூலம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் முன்னேற்றம் மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் குடும்பங்கள் ஏற்கனவே 100 நாட்கள் வேலையை முடித்து விட்டன. இந்த திட்டத்தின் கீழான ஒட்டுமொத்த செலவினம் இந்த ஆண்டில் இதுவரை 48,000 கோடி ரூபாயாக இருக்கிறது. இது 2021-ம் நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மொத்த தொகையில் ஏறக்குறைய பாதியாகும்.

ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப்பணிகள் தொடர்பாக சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. தொழிலாளர்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவிடம் பேசியபோது, கிராம வளர்ச்சி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், “இந்த நிதி ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் மிகவும் குறைந்த பணமே ஒதுக்கியிருக்கின்றோம்” என்றார்.

அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் நடத்திய ஒரு சர்வேயில், நாட்டில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான பஞ்சாயத்துகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் ஏற்கனவே செலவிடப்பட்டுவிட்டது என்று தெரியவந்துள்ளது. பஞ்சாயத்துகளில் உள்ள திட்டங்கள் 2020-ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரீப் பருவகாலத்தில் தேவையில் கொஞ்சம் குறைவு ஏற்பட்டபோதிலும், 2021-ம் நிதி ஆண்டின் கடைசி வரையிலுமாவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழான பணிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று இந்த பவுண்டேஷனின் ஆய்வு சொல்கிறது.

எனவே இந்தத் திட்டத்தின் கீழான ஒதுக்கீடு மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாயில் இருந்து மொத்தமாக 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று சர்வேயில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே போல ஒரு குடும்பத்துக்கு தலா 200 வேலை நாட்களாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கான வருவாய் ஆதரவு மற்றும் வாழ்வாதாரம் வழங்கும் பொருட்டு , முன்னாளர் ஆர்பிஐ கவர்னர் மற்றும் தற்போதைய எழுத்தாளர், இந்த திட்டத்தின் வேலை நாட்களை 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும்என்று ஆலோசனை சொல்லி உள்ளார். நகர்புறங்களிலும் வேலை உறுதி அளிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இந்த திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் இருந்து கொஞ்சம் மாறுபட்டுள்ளது.

நகர்புற பகுதிகளில் திறன் அற்ற மற்றும் பிந்ததைய தொழிலாளர்களுக்கும் தேவை இருப்பதால் பகுதி திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கிராமப்புறம் மற்றும் நகர்புறம் இரண்டுக்கும் சேர்ந்து 150 வேலை நாட்களுக்கான கூடுதல் செலவினமாக ரூ.2.48 லட்சம் கோடிகள் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.22%)முன்மொழியப்பட்டிருக்கிறது. கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வேலையளிப்பு உறுதித் திட்டத்துக்கான செலவினங்களுக்கு அரசாங்கம், நெகிழ்வுதன்மையை கடைபிடிக்க வேண்டும்

பல்வேறு மாநிலங்களில் கிராம பஞ்சாயத்துகளில் செய்யப்பட உள்ள மேலதிக திட்டங்களை உருவாக்குவதற்கான விரைவான செயல்முறைகளில் அவசரம் தேவை. ஒவ்வொரு கிராமத்திலும் பொதுப் பணிகள் தொடங்க வேண்டியதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இதில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். வழங்கல் சார்ந்த திட்டம் போல, மாநில அரசுகள் இந்த திட்டத்தை அமல்படுத்தத் தொடங்க வேண்டும். இது சட்டத்தால் ஆதரிக்கப்படும் கோரிக்கை அடிப்படையிலான உத்தரவாதத்தைப்போல இயங்க வேண்டும்.

தங்கள் கிராமங்களை அடைய பல ஆயிரம் கிலோமீட்டர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் எப்படி நடந்தே சென்றனர் என்பதை இந்த ஒட்டு மொத்த தேசமும் பார்த்தது. வேலை இழந்த கார்பென்டர்கள், பெயிண்ட் அடிப்பவர்கள், கார் டிரைவர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் போன்ற திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உட்பட இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்துக்கு தேவை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பகுதி திறன் வாய்ந்த மற்றும் திறன் வாய்ந்த பணிகள் வழங்கபட வேண்டியதிருக்கும்.

பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த திட்டத்துக்கான ஊழியர்களாக பணியாற்றுவதை இந்த தேசம் பார்க்கின்றது. மிகுந்த துயரங்களுக்கு மத்தியில் இருக்கும் இதர தொழிலாளர்கள் மற்றும் வேலையற்ற புலம் பெயர்தொழிலாளர்களுக்கு நம்பிக்கையின் கதிராக இந்த வேலை உறுதி அளிப்புத் திட்டம் இருக்கிறது என்ற முக்கியத்துவத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

தேசிய வேலை உறுதி அளிப்புத் திட்டத்தை வலுப்படுத்துவதற்கு மத்தியில், வேளாண்மை மற்றும் கிராம மறுமலர்ச்சிக்காக இதர சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. முதலாவதாக விவசாயிகளுக்கான வருவாய் உயர்த்தப்பட வேண்டும். அதிகபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பது அவசிய தேவையாக இருக்காலாம். ஆனால், விலை உயர்வை உறுதி செய்வதற்கு விநியோக தொடர்புகளுக்கு புத்துயிரூட்ட வேண்டிய தேவையிருக்கிறது. ஆத்மநிர்பார் திட்டத்தில் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் நடுத்தரகாலத்துக்கு உதவும். எனினும், இந்த சீரமைப்புகள் மீதான மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றை அரசு மேலும் தெளிவு படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, வேளாண் ஏற்றுமதி முன்னெடுக்கப்பட வேண்டும். எதிர்கால சந்தைகள் மற்றும் ஏற்றுமதியில் நீண்ட நிலையான கொள்கைகளுக்கான தேவை இருக்கிறது. ஆத்மநிர்பார் என்பதன் பொருள் நாம் தற்சார்பு கொண்டவர்களாக மாற வேண்டும் என்பதுதான். இந்தியா மிகவும் குறைவான அளவில்தான் பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துகிறது. எனவே இது, உணவு படுத்துதலை பெரிய அளவுக்கு முன்னெடுக்க வேண்டும்.

மூன்றாவதாக, அண்மையில் பிரதமர் ஒரு லட்சம் கோடி ரூபாய் வேளாண் கட்டமைப்பு நிதியத்தை தொடங்கினார். ஆனால், முழுதொகையையும் நான்கு ஆண்டுகளுக்குள் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் ஆண்டில் 10,000 ரூபாய் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளது. கிராம கட்டமைப்புகளில் முதலீடு செய்வது என்பது வேலை வாய்ப்புகள் மற்றும் கூலியை அதிகரிப்பதற்கு அவசியமானதாகும். நாம் பண்ணைக்கு அப்பாலும் செல்ல வேண்டும். கிடங்குகள், போக்குவரத்து, பதப்படுத்துதல், சில்லறை விற்பனை ஆகியவற்றிலும் முதலீடு செய்ய வேண்டும்.

வேளாண் கட்டமைப்பு நிதி, வேளாண் செயல்பாடுகளின் தொகுப்பை முன்னெடுப்பதற்கு உபயோகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இது விவசாயிகளுக்கான நல்ல வருவாயைக்கொடுக்கும். இதேபோல, கிராம கட்டுமானங்கள், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் கிராமப்புற ஊதியங்களை அதிகரிக்கவும் மிகவும் முக்கியமானதாகும். 2004-05 மற்றும் 2011-12 காலகட்டங்களின் போது கிராம ஊழியர்களுக்கான ஊதியங்களை உயர்த்துவதில் கட்டுமானங்கள் முக்கிய பங்கு வகித்தன.

நான்காவதாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 51 சதவிகிதம் கிராமப்பகுதிகளில்தான் உள்ளன. கோவிட் 19 காரணமாக இவை பெரும் சரிவில் இருக்கின்றன. வங்கி சாரா நிதி நிறுவன பிரச்னைகள் உள்ளிட்டவை காரணமாக முந்தைய சரிவினால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன. தவிர கிராமப்பகுதிகளில் உள்ள குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும். தவிர சீனாவால் காலியாக உள்ள இடைவெளியிலும் வாய்ப்புகள் உள்ளன. சக்திவாய்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் இல்லாமல் இந்தியா ஆத்மநிர்பாராக மாற முடியாது.

கடைசியாக, வேளாண்மை மற்றும் வேளாண் அல்லாத தொடர்புகள், கிராம-நகர்புற தொடர்புகள் ஆகியவை கிராமம் புத்துயிர் பெறுவதற்கு முக்கியமானதாகும்.இதேபோல, நகர்புற நிதித்தூண்டுதல், பெருநிறுவனங்கள் துறை மற்றும் வங்கிகளின் இரட்டை இருப்பு நிலை சிக்கலை தீர்த்தல் கிராமப்புறங்களுக்கு உதவும், தவிர கிராமப்புற –நகர்புற இணைப்புகள் காரணமாகவும் உதவும்.

முடிவாக, வேலைவாய்ப்பில் கோவிட் 19 பெருந்தொற்றின் பாதகமான தாக்கம் 2020-21-ம் ஆண்டில் அதிகரிக்கப்போகிறது. எனவே, இந்த தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் பல பிரச்னைகளுக்கு நல்ல சாத்தியமான தீர்வாக இருக்கப்போகிறது. பயனுள்ள வகையில் செயல்படுத்துதல், அடிமட்ட அளவில் திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், அதிக நிதியை ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும்.

எனவே புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் இதர கிராம ஊழியர்களுக்கு வேலை அளிப்பதில் இந்த தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டமானது ஒரு மீட்பராக இருக்கிறது. அதேபோல, உற்பத்தி மற்றும் சேவைகள் மந்தமான நிலையில் இருப்பதால், வேளாண்துறை நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் கடவுளின் கிருபையாக இருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.