ETV Bharat / bharat

கேரளா நிலச்சரிவு: உயிரிழப்பு 28ஆக உயர்வு; அதில் 17 பேர் தமிழர்கள்!

author img

By

Published : Aug 9, 2020, 1:35 PM IST

கேரளாவின் ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. இதில் 17 பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்த நிலையில் அனைவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கேரளா நிலச்சரிவு, kerala landslide, idukki landslide, இடுக்கி நிலச்சரிவு
கேரளா நிலச்சரிவு

இடுக்கி (கேரளா): கனமழையின் காரணமாக நிலச்சரிவில் சிக்கியதில், இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 17 பேர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கனமழையால், ஆகஸ்ட் 7ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர் குடியிருப்பு முகாமில் தங்கியிருந்த 80க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். இத்தகவல் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர், கேரள காவல்துறை, தீயணைப்புத்துறை, தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் 2 நாட்களாக தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நண்பகல் நிலவரப்படி மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட 12-க்கும் மேற்பட்டோர் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடுக்கி அணையில் தொடர் நிலநடுக்கம் - புவியியல் துறையினர் ஆய்வு

தேயிலைத் தோட்ட அமைப்புகள், உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் இணைந்து காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது. ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் மீட்புப்பணி நடைபெற்றுவரும் சூழலில், மண்ணிற்கு அடியில் சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அலுவலர்கள் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர்.

இச்சூழலில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாரைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவு ஏற்பட்ட பெட்டிமுடி பகுதி தேயிலைத் தோட்டங்களில் தங்கி, பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதில் 55 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் போனதால், உறவினர்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர். கயத்தாரில் இருந்து 40 பேர் உடனடியாக இ-பாஸ் பெற்று கேரளா விரைந்துள்ளனர்.

சின்னாறு சோதனைச்சாவடியில் கேரள காவல் துறையினர் அனுமதிக்க மறுப்பதாகவும், கரோனாவைக் காரணம் காட்டி, உறவினர்கள் செல்லும் முன் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது எனவும் உறவினர்கள் கோருகின்றனர். மீட்புப்பணி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ள இடுக்கி மாவட்ட நிர்வாகம், கூடுதலாக 2 தேசியப் பேரிடர் மீட்புக்குழுவை வரவழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இடுக்கி நிலச்சரிவில் சிக்கிய கயத்தாறு தொழிலாளர்கள்!

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள அரசு சார்பில் தலா 5 லட்சமும், மத்திய அரசு சார்பில் 2 லட்சம் ரூபாயும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் நிலச்சரிவில் உயிரிழந்த 28 பேரின் உடல்கள் உறவினர்கள் ‌பார்வைக்குப் பின்னர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த 28 பேரில் 17 பேர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.