ETV Bharat / bharat

கேரள தலைமைச் செயலகத்தில் தீ: ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்

author img

By

Published : Aug 26, 2020, 10:31 AM IST

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா, தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

Kerala Secretariat
Kerala Secretariat

கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.25) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தலைமைச் செயலகத்தின் வடக்கு பகுதியில் கொளுந்து விட்டு எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தலைமைச் செயலகத்தின் வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 'இந்தத் தீ விபத்து, விபத்து அல்ல... இது திட்டமிட்ட சதி. தங்கக் கடத்தல் வழக்கில் உள்ள ஆவணங்களை அழிக்கும் முயற்சியாக இது நடந்துள்ளது' என்றும் குற்றஞ்சாட்டினர்.

தீ விபத்து குறித்து கேரள தலைமைச் செயலகத்தின் கூடுதல் செயலர் பி.கனி கூறுகையில், 'மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது. முக்கியமான கோப்புகள் எதுவும் அழிக்கப்படவில்லை. அவைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன' என்றார்.

இந்நிலையில், கேரள மாநிலச் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா நேற்று (ஆக.25) ஆளுநர் ஆரிப் மோத் கானைச் சந்தித்தார். அப்போது ஆளுநரிடம், தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமெனவும், இதில் தங்கக் கடத்தல் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இது குறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இது குறித்து ரமேஷ் சென்னிதாலா விரிவான மனு ஒன்றை அளித்துள்ளார். அப்போது எம்.எல்.ஏக்களான சிவக்குமார், பிகே பசீர், விடி பல்ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: லாக்கரில் இருந்த 14 கிலோ தங்க நகைகள் திருட்டு: போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.