ETV Bharat / bharat

பாய்ஸ் லாக்கர் ரூம்- அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

author img

By

Published : May 5, 2020, 11:53 AM IST

டெல்லி: தங்களுடன் பயிலும் சக மாணவிகளை எவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தலாம் என இன்ஸ்டாகிராம் குழுவில் பேசிக்கொண்ட பள்ளி மாணவர்களின் உரையாடல்கள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, இதுதொடர்பாக பதிலளிக்க இன்ஸ்டாகிராமிற்கும், டெல்லி காவல் துறையினருக்கும் அம்மாநில பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DCW on Instagram case
DCW on Instagram case

டெல்லியில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் பாய்ஸ் லாக்கர் அறை என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ள மாணவர்கள் தங்களின் வகுப்பு தோழிகள் மற்றும் சிறு வயது பெண்களின் நிர்வாண படங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதுடன் படங்களுக்கு மதிப்பெண்ணும் வழங்கி வந்துள்ளனர்.

மேலும், பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்வது பற்றியும் தங்களுக்குள் பேசிவந்ததும் தெரியவந்துள்ளது. இதனிடையே இவர்கள் தங்களுக்குள் வைத்திருந்த ஸ்கிரீன் ஷாட்டுகள் தெற்கு டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் வைரலானது.

தன்னுடன் பயிலும் சில மாணவர்கள் பெண்களை எவ்வாறு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யலாம் என்று இன்ஸ்டாகிராம் குழுவில் பேசிவருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், ஸ்கிரீன் ஷாட்டுகளை பகிர்ந்த மாணவி கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து பேசிய டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால், பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற இன்ஸ்டாகிராம் குழுவில் பள்ளி மாணவர்களால் பகிரப்பட்ட தகவலைப் பார்த்தேன். இது முழுக்க முழுக்க கொடூரமான குற்றச்செயல்கள் புரிகின்ற, பாலியல் வன்புணர்வில் ஈடுப்படுபவர்களின் மனநிலையை போன்று உள்ளது. இதுகுறித்து பதிலளிக்க டெல்லி காவல் துறைக்கும், இன்ஸ்டாகிராமிற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அந்த இன்ஸ்டாகிராம் குழுவில் உள்ள அனைவரும் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராமிற்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், அந்தக் குழுவின் உறுப்பினர்கள் , நிர்வாகிகள், அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த நடவடிக்கை குறித்த தகவலையும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அதன் காரணத்தையும் தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், முதல் தகவல் அறிக்கையின் நகலையும் வரும் 8ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல் துறையினருக்கு அம்மாநில பெண்கள் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

இதையும் பார்க்க: 'முடங்கிய நாடு, சுருங்கிய வயிறு'- பாலியல் தொழிலாளர்களின் கண்ணீர் கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.