ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: சுஷாந்த் மரணத்தை மத்திய அரசு அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது - சிவசேனா

author img

By

Published : Oct 5, 2020, 3:02 PM IST

மும்பை : பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை அரசியல் லாப நோக்கில் மத்திய அரசு பயன்படுத்தி வருகிறதென சிவசேனா எம்.பி., சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

சுஷாந்த மரணத்தை மத்திய அரசு அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது- சிவசேனா
சுஷாந்த மரணத்தை மத்திய அரசு அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது- சிவசேனா

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சுஷாந்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது தந்தை கே.கே.சிங்கின் வேண்டுகோளை ஏற்று உச்ச நீதிமன்றம் மத்திய குற்றப்புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. தற்போது அந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சுஷாந்த் சிங்கின் உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவமனை தடயவியல் துறை தலைவர் மருத்துவர் சுதிர் குப்தா தலைமையில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழு தனது இறுதி அறிக்கையை கடந்த 3ஆம் தேதியன்று சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது.

தடயவியல் துறையின் மருத்துவர் குழு மேற்கொண்ட உடற்கூராய்வு பரிசோதனையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலையால் ஏற்படவில்லை, தற்கொலைதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று ஊடகங்களிடையே பேசிய சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் கூறுகையில், "எய்ம்ஸ் தடயவியல் மருத்துவக் குழு அளித்த இறுதி ஆய்வறிக்கையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணமானது கொலையல்ல, தற்கொலைதான் என கூறியுள்ளது. சுஷாந்த் மரணத்தில் கொலை என்ற கோணத்தையே முற்று முழுதாக நிராகரித்தது.

வழக்கு விசாரணையின் தொடக்கத்திலிருந்து மகாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை காவல்துறையின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அரசியல் காரணங்களுக்காக குற்றம்சாட்டப்பட்டு வந்தன. எய்ம்ஸ் அறிக்கைகளை சந்தேகிக்கும் நபர்களிடம் என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிபிஐக்கு அறிக்கை சமர்ப்பித்த எய்ம்ஸ் தடயவியல் மருத்துவக்குழுவின் தலைவர் டாக்டர் சுதிர் குப்தாவுக்கு மகாராஷ்டிரா அரசுடனோ அல்லது சிவசேனா கட்சியுடனோ எந்த தொடர்பும் இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கில், மகாராஷ்டிரா அரசையும் மும்பை காவல்துறையையும் இழிவுபடுத்தும், குற்றவாளிகளாக சித்தரிக்கும் சதித்திட்டம் நடந்து வருகிறது. இப்போது சிபிஐ விசாரணையும் நம்பப்படாவில்லை என்பதால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

அறிக்கை குறித்து ரவுத் கூறுகையில், "சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் எய்ம்ஸ் தடயவியல் மருத்துவ வாரியத்தின் தலைவரான டாக்டர் சுதிர் குப்தாவின் அறிக்கையின்படி அவருக்கு அரசியல் தொடர்பு அல்லது சிவசேனாவுடன் எந்த தொடர்பும் இல்லை.

மறைந்த நடிகர் சுஷாந்தின் மரண வழக்கில் மும்பை காவல்துறை மற்றும் மகாராஷ்டிரா அரசை அவதூறு செய்த அரசியல் கட்சிகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

வரவிருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற மறைந்த நடிகரின் குடும்பத்தினரின் உணர்வுகளை அரசியல் லாப நோக்கில் மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது" என்றார்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் மும்பை காவல்துறையினர் மீதும், அரசு மீதும் விமர்சனங்களை வைத்துவந்த பிகார் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே தனது பதவியை விருப்ப ஓய்வில் ராஜினாமா செய்துவிட்டு தற்போது பிகார் தேர்தலில் போட்டியிட இருப்பது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.