ETV Bharat / bharat

உடனுக்குடன்... பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு

author img

By

Published : Sep 30, 2020, 11:30 AM IST

Updated : Sep 30, 2020, 2:09 PM IST

பாபர் மசூதி
பாபர் மசூதி

14:07 September 30

புனிதர்கள் மீது அவதூறு பரப்பிய காங்கிரஸ் மன்னிப்பு கோரவேண்டும்- யோகி ஆதித்யநாத்

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். காங்கிரஸ் ஓட்டு அரசியலுக்காக புனிதர்களையும், பாஜக தலைவர்களையும், விஷ்வ இந்து பரிஷீத் அமைப்பினரையும் அவதூறு செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.  

13:55 September 30

இந்தத் தீர்ப்பு பாஜகவின் நம்பிக்கையை நிரூபிக்கிறது- அத்வானி

"பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு பாஜகவின் நம்பிக்கையையும், ராம ஜென்மபூமி இயக்கம் மீதான அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது" என்று பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ணா அத்வானி தெரிவித்துள்ளார். 

13:44 September 30

நாங்கள் எந்தவொரு சதித்திட்டத்திற்கும் துணை போகவில்லை என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது- முரளி மனோகர் ஜோஷி

"இது நீதிமன்றத்தின் வரலாற்று முடிவு. அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடந்த சம்பவத்தில் எந்த சதியும் இல்லை என்பதை இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது. எங்கள் திட்டமும், பேரணிகளும் சதித் திட்டத்தின் பகுதியாக இல்லை என்பது இப்போது  தெளிவாகியுள்ளது. நாங்கள் இந்த தீர்ப்பினால் மகிழ்ச்சியடைகிறோம். ராம ஜென்ம பூமி கட்டுமானப் பணிகளில் உற்சாகமாக செயல்படுவோம்" என பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார். 

13:40 September 30

'நீதி வெற்றி பெற்றது' - பாதுகாப்பு துறை அமைச்சர்

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  லக்னோ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், தாமதமானதாக இருந்தாலும் நீதி வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

13:35 September 30

அத்வானியுடன் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆலோசனை

பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ணா அத்வானியுடன் அவரது இல்லத்தில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆலோசனை நடத்துகிறார். 

13:19 September 30

'அப்போதைய அரசாங்கம் சதித்திட்டத்தை தீட்டியது' - அயோத்தி எம்.பி. லல்லு சிங்

பாபர் மசூதி இடிப்பு  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அயோத்தி எம்.பி. லல்லு சிங், லக்னோ சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு  வரவேற்பு தெரிவித்துள்ளார். அப்போதைய அரசாங்கம்  சதித்திட்டத்தை தீட்டி வேண்டுமென்றே குற்றம்சாட்டியது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பால் அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

12:29 September 30

பாபர் மசூதி வழக்கு - அனைவரும் விடுதலை

  • பாபர் மசூதி வழக்கில் அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு
  • குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் அறிவிப்பு

12:29 September 30

வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை

இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அறிவிக்க உள்ள நிலையில், எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி, சதீஷ் பிரதான், மகாந்த் நிருத்யா கோபால் தாஸ் ஆகியோரிடம் மெய் நிகர் முறையில் (வீடியோ கான்பரன்சிங் மூலம்) விசாரணை நடைபெற்றது.  

12:17 September 30

நாட்டின் தலைநகரில் கடுமையான விழிப்புணர்வு

பாபர் மசூதி இடிப்பு வழக்கின்  தீர்ப்பைக் கருத்தில் கொண்டு தலைநகரில் கடுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. "நகரம் முழுவதும் பாதுகாப்பு அம்சங்களை  கண்காணிப்போம்" என்று மூத்த காவல் அலுவலர் ஒருவர் இதுகுறித்து கூறியுள்ளார். 

12:00 September 30

2,000 பக்கங்களில் தீர்ப்பு?

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை நீதிபதி சுரேந்திர யாதவ் வாசித்து வருகிறார். இந்த  வழக்கின் தீர்ப்பு சுமார் 2,000 பக்கங்களைக் கொண்டது என கூறப்படுகிறது. பாஜக தலைவர்கள் 8 பேர் மீது மசூதியை இடிக்கத் துண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

11:54 September 30

32 பேரில் 26 பேர் மட்டுமே ஆஜர்

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளனர். பாஜக முக்கியத் தலைவர்கள் லால் கிருஷ்ண அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் ஆஜராகவில்லை.  

11:49 September 30

'தண்டனையை ஏற்கத் தயார்' - உமாபாரதி

மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் உமாபாரதி
மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் உமாபாரதி

'பாபர் மசூதி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தண்டனை அளித்தால் ஏற்றுக் கொள்வேன்'  என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.  

11:44 September 30

லக்னோவில் பலத்த பாதுகாப்பு

இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், லக்னோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

11:37 September 30

பாபர் மசூதி இடிப்பு வழக்கு - வாசிக்கப்பட்டு வரும் தீர்ப்பு

பாபர் மசூதி
பாபர் மசூதி

இந்த வழக்கு தொடர்பான குற்றவாளிகளின் பெயரையும் வழக்கின் சாராம்சத்தையும் நீதிபதி சுரேந்திர யாதவ் தற்போது வாசித்து வருகிறார்.

11:19 September 30

28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு தொடர்பான தீர்ப்பும் அதன் பின்னணி தகவல்களும்...

28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில்  தீர்ப்பு வழங்க உள்ளது. லக்னோவைச் சேர்ந்த சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுரேந்திர யாதவ்,  செப்டம்பர்  1ஆம் தேதி அனைத்து தரப்பினரின் சாட்சியங்களையும், வாதங்களையும் கேட்டு முடித்த பின்னர், இன்று (செப்.30) தீர்ப்பு வழங்குவதாக செப்டம்பர் 16ஆம் தேதி அறிவித்திருந்தார்.  

1992 டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி கட்டடம் இடிக்கப்பட்டது.  இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 49 பேரில் 17 பேர் இறந்துவிட்ட நிலையில்,  பாஜக முக்கியத் தலைவர்கள் லால் கிருஷ்ண அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட 32 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

மேலும் தகவலுக்கு; பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்புக்கு முன் வழக்கு குறித்த விரிவான பார்வை

Last Updated : Sep 30, 2020, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.