ETV Bharat / bharat

உ.பி அடிக் அகமது கொலை - முக்கிய அப்டேட்ஸ்!

author img

By

Published : Apr 16, 2023, 6:03 PM IST

உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடியும் அரசியல்வாதியுமான அடிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் பொதுவெளியில் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Atiq
Atiq

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜில், நேற்றிரவு(ஏப்.15) பிரபல ரவுடியும் அரசியல்வாதியுமான அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்முண்ணே பொது வெளியில் நடந்த இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உத்தரபிரதேசத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்பான கொலை சம்பவத்தில் இதுவரை நடந்த முக்கிய அப்டேட்களை இப்போது பார்க்கலாம்...

  • அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் மருத்துவமனைக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டபோது, பத்திரிகையாளர்கள் போல வந்த மூன்று நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
  • துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய லவ்லேஷ் திவாரி, மோஹித் என்ற சன்னி, அருண் மௌரியா ஆகியோர் மீது ஐபிசி 302, 307 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே போலீசார் முன்பு இந்த தாக்குதலை நடத்தியதாக மூவரும் தெரிவித்துள்ளனர்.
  • பரபரப்பான இந்த கொலைகள் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 3 பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை அமைத்துள்ளார்.
  • அடிக் அகமது கொலை குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றும், குற்றவாளிகள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். போலீசார் மற்றும் ஊடகத்தினர் கண் முன்பு நடந்த இந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது என்றும் தெரிவித்துள்ளார்.
  • பொதுவெளியில் நடந்த இந்த கொலைகளுக்குப் பொறுப்பேற்று, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். உத்தரபிரதேசத்தில் சட்டத்தின்படி அல்ல, துப்பாக்கியின்படி ஆட்சி நடைபெறுகிறது என்று கூறினார்.
  • அடிக் அகமது, அஷ்ரப் கொலை குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அரசியலமைப்புச் சட்டத்தில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. குற்றவாளியின் தண்டனையை தீர்மானிக்கும் உரிமை நீதித்துறைக்கு உண்டு. இந்த உரிமையை ஒரு அரசாங்கத்திற்கோ, ஒரு அரசியல் தலைவருக்கோ அல்லது வேறு எந்தவொரு நபருக்கும் வழங்க முடியாது. இதுபோன்ற துப்பாக்கி மற்றும் கும்பல் தாக்குதல்களை ஆதரிப்பவர்கள் அரசியல் சாசனத்தை அழிக்கிறார்கள். அரசியல் நோக்கத்திற்காக நீதி அமைப்பில் தலையிடுபவர்கள் குற்றவாளிகளுடன் சேர்ந்து தண்டனை பெற நேரிடும்" என்று கூறினார்.
  • திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கூறும்போது, "பாஜக இந்தியாவை மாஃபியா குடியரசா மாற்றிவிட்டது. இதை நான் இங்கு மட்டுமல்ல, வெளிநாட்டிலும் சொல்வேன், எல்லா இடத்திலும் சொல்வேன். ஏனென்றால் இது தான் உண்மை. இந்த சம்பவம் சட்டத்தின் ஆட்சி மரணித்துவிட்டதை காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.
  • "உத்தரபிரதேசத்தில் குற்றங்கள் உச்சத்தை எட்டியுள்ளன. போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் இப்படி கொலைகள் நடந்தால், பொதுமக்களின் நிலை என்ன? - இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற சூழலை உருவாக்குவது போல் தெரிகிறது" என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
  • ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் வந்தவர்கள் கொலை செய்ததால், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைத் தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
  • உமேஷ் பால் கொலை வழக்கில் அடிக் அகமது குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசும் போது, நீதிமன்ற விசாரணைக்காக பிரயாக்ராஜுக்குச் செல்லும்போது, போலி என்கவுன்டரில் தான் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக அடிக் அகமது அச்சம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடிக் அகமது துப்பாக்கிச்சூடு - "அராஜகத்தின் உச்சபட்சம்" - யோகி அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.