ETV Bharat / bharat

India Vs Nepal : அடுத்த சுற்று வாய்ப்புக்காக இந்தியா! தாக்குபிடிக்குமா நேபாளம்! என்ன நடக்கப் போகுதோ?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 7:35 AM IST

Ind Vs Nepal Asia Cup 2023 : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் இரு அணிகளும் உள்ளன என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Cricket
Cricket

பல்லேகலே : 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப். 4) இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணியை பொறுத்தவரை பாகிஸ்தானுடன் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது. அடுத்த சுற்றான சூப்பர் 4ல் நுழைய வேண்டும் என்றால் நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் சற்று சுமாராக இருந்தது எனலாம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் சோபிக்க தவறினர். சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணியாக அமைந்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய ஹர்த்திக் பாண்ட்யா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் ஆட்டத்தால் சரிவில் இருந்த மீண்ட இந்திய அணி கவுரமான ஸ்கோரை எட்ட முடிந்தது. இருப்பினும் மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போய்விட்டது. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் பந்துவீச்சாளர் பும்ரா கலந்து கொள்ளமாட்டார் எனக் கூறப்படுகிறது. அவர் இல்லாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான். மறுபுறம் சிறிய அணியான நேபாளம் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 238 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நேபாளம் அணியும் உள்ளது. அதேநேரம் இந்திய வீரர்களுக்கு ஈடுகொடுத்து நேபாள வீரர்களால் விளையாட முடியுமா என்று கேட்டால் மில்லியன் டாலர் கேள்வி தான். இரு அணி வீரர்களும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய ஆட்டத்திலும் மழையின் பாதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது வருண பகவான் கையில் தான் இருக்கிறது என்றால் மிகையல்ல.

இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :

இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா.

நேபாளம் : ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), ரோகித் பவுடெல் (கேப்டன்), குஷால் புர்டெல், ஆரிப் ஷேக், சோம்பால் கமி, குல்சன் ஜா, திபேந்திர சிங் ஐரி, குஷால் மல்லா, சந்தீப் லாமிச்சானே, கரண் கேசி, லலித் ராஜ்பன்ஷி, பீம் ஷர்கி, கிஷோர் மஹதோ, சந்தீப் ஜோரா, பிரதிஸ் ஜி.சி., அர்ஜுன் சவுத்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.