ETV Bharat / bharat

ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை திறப்பு

author img

By

Published : Oct 18, 2022, 3:14 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல் சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருவனந்தபுரம்(கேரளா): ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று மாலை முதல் திறக்கப்பட்டுள்ளது. புதிய மேல் சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகப்புரம் மேல் சாந்தியாக குலுக்கல் முறையில் ஹரிஹரன் நம்பூதிரியும் தேர்வாகியுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல் சாந்தி என்பவர் அதிகாரம் மிக்கவர். ஐயப்பன் கோயில் யாத்திரை செல்லும் பக்தர்கள் மேல் சாந்தியை சந்தித்து ஆசிப்பெறுவர். கோயில் நடை திறந்து பூஜைகளை தொடங்கி வைப்பது, நிர்வாகப் பொறுப்புகளை கவனிப்பது வரை அனைத்து அதிகாரமும் மேல் சாந்திக்கு உள்ளது.

கோயில் நடை திறப்பு

வேதங்கள், தாந்திரீகம், சாஸ்திரம் கற்றவர்கள் வேறு பிரபல கோயில்களில் மேல் சாந்தியாக பணியாற்றியவர்கள் மட்டுமே மேல் சாந்தியாக முடியும். சபரிமலை ஐயப்பன் கோயில் மேல் சாந்தியாக பணியாற்றுவது பாக்கியம் என்று பலரும் கருதுவர்.

ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலையில் திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் நடைபெற்றது.

மேல் சாந்தி தேர்வு: தந்திரி முன்னிலையில் புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நடைபெற்றது. நேர்காணல் மூலம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 10 பேரின் பெயர்கள் ஒரு வெள்ளி குடத்திலும், மேல்சாந்தி என எழுதப்பட்ட ஒரு துண்டு சீட்டுடன் ஒன்றும், எழுதாத 9 துண்டு சீட்டுகள் மற்றொரு வெள்ளி குடத்திலும் போடப்பட்டது.

ஐயப்பன் கோயில் புதிய மேல் சாந்தி: பின்னர் குலுக்கல் மூலம் துண்டு சீட்டுகள் குடங்களில் இருந்து ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டது. ஜெயராமன் நம்பூதிரி பெயர் எழுதிய சீட்டு எடுக்கப்பட்ட போது மற்றொரு குடத்தில் எடுக்கப்பட்ட சீட்டில் மேல் சாந்தி என எழுதப்பட்ட துண்டு சீட்டும் வந்தது. அதைத் தொடர்ந்து ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

மாளிகாபுரம் மேல் சாந்தி: இதே போல் மாளிகாபுரம் மேல் சாந்தியாக குலுக்கல் முறையில் ஹரிஹரன் நம்பூதிரி தேர்வானார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரு மேல் சாந்திகளும் வரும் நவ.16 ஆம் தேதி மண்டல பூஜை முதல் ஒரு ஆண்டு பணியாற்றுவார்கள். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய மேல் சாந்தி தேர்வு செய்யப்படுவார். நேற்று திறக்கப்பட்ட கோயில் நடை 22ஆம் தேதி மாலை ஹரிவராசனம் பாடி அடைக்கப்படும். மீண்டும் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படும்.

மண்டல பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை காலம் 41 நாட்கள் வரும் நவ.17 ஆம் தேதி தொடங்க உள்ளது. டிசம்பர் 27 வரை மண்டல பூஜை காலமாகும். டிசம்பர் 26ஆம் தேதி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். டிச.7 ஆம் தேதி மண்டலாபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக டிச.31 ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படும்.

இதையும் படிங்க: சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி கோயில் நடை சாத்தப்படுகிறது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.