ETV Bharat / bharat

பஞ்சாபில் பதவியேற்புக்கு முன் மாபெரும் வீதியுலா; கொண்டாட்டத்தில் கெஜ்ரிவால்!

author img

By

Published : Mar 11, 2022, 6:59 PM IST

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மாண் வரும் மார்ச் 16ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர், ஆம் ஆத்மி அமிர்தசரஸில் மாபெரும் வீதியுலா நிகழ்ச்சியை மார்ச் 13ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.

Bhagwant Mann to meet Arvind Kejriwal in Delhi
Bhagwant Mann to meet Arvind Kejriwal in Delhi

சங்ரூர்: நடைபெற்று முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பஞ்சாபில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றிதான் நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்தது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பாக பஞ்சாப் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட பகவந்த் சிங் மாண், இன்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை சந்தித்தார்.

திமிர் பிடித்தவர்கள் தூக்கியெறியப்பட்டனர்

இச்சந்திப்பிற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் சிங் மாண், "மக்கள் திமிர் பிடித்தவர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, எளிய மக்களை ஆட்சியில் அமரவைத்துள்ளனர்" என காங்கிரஸின் தோல்வியைச் சுட்டிக்காட்டி கூறினார்.

முன்னதாக, பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அம்மாநில ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ள நிலையில், வரும் மார்ச் 16இல் பகவந்த் சிங் மாண் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமிர்தசரஸ் நகரில் நாளை மறுநாள் (மார்ச் 13) பகவந்த் சிங் உடன் அரவிந்த் கெஜ்ரிவால் மாபெரும் வீதியுலா நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

பகவந்த் சிங் மாண் தனது சொந்த மாவட்டமான சங்ரூரில் உள்ள தூரி தொகுதியில் போட்டியிட்டு, 58,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், தனது பதவியேற்பு விழா சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமத்தில் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உத்ரகாண்ட் முதலமைச்சர் ராஜினாமா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.