ETV Bharat / state

32 ஆயிரத்துடன் பணப்பையை தவறிட்ட பெண் - திருப்பி கொடுத்த பழக்கடை மூதாட்டியை கெளரவித்த கலெக்டர்

பணப்பையை திருப்பி கொடுத்த மூதாட்டியின் செயலை பாராட்டி அவருக்கு தேனி மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களை தெரிவித்தார்.

மூதாட்டியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்
மூதாட்டியை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் (Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 30, 2026 at 3:50 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தேனி: பழக்கடையில் 32 ஆயிரம் பணத்துடன் இருந்த பணப்பையை தவறவிட்ட பெண்ணிடம் அதை திருப்பி கொடுத்த மூதாட்டியை, தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார்.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே 60 வயதான மூதாட்டி பசுபதி அம்மாள் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியை சேர்ந்த செல்வி (50) என்ற பெண் பழங்களை வாங்க வந்துள்ளார். பழங்களை வாங்கிவிட்டு செல்வி கையில் வைத்திருந்த பணப்பையை பழக்கடையில் மறந்து வைத்துவிட்டு சென்றதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களுக்கு பிறகு பழக்கடையில் இருந்த பணப்பையை பார்த்த கடையின் உரிமையாளர் பசுபதி அம்மாள், அதை எடுத்து பார்த்தபோது அந்த பணப்பையில் 32 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்வியின் அடையாள அட்டைகள் ஆகியவை இருந்துள்ளன. கடைக்கு பழம் வாங்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணப்பையை தவறவிட்டு சென்றுள்ளார் என்பதை அறிந்த மூதாட்டி, அந்த பணப்பையை பத்திரமாக எடுத்து வைத்து, அவர்கள் திரும்பி வருவார்கள் என காத்திருந்துள்ளார்.

ஆனால், பணப்பையை பத்திரமாக எடுத்தி வைத்து 15 நாட்கள் கடந்தும் பணத்தை திரும்ப பெற யாரும் வராததால், அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நோக்கில், தேனி மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுநராக பணிபுரியும் தனது சகோதரர் முருகனிடம் மூதாட்டி 32 ஆயிரம் ரூபாய் பணத்துடன் இருந்த பணப்பையை கொடுத்தும், இதனை உரியவரிடம் ஒப்படைக்கும்படி தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆவின் நீல நிற பால் விநியோகம் குறைப்பு: பொதுமக்கள் அவதி

இதனையடுத்து, பணத்தைத் தொலைத்த செல்வி என்ற பெண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து மூதாட்டி பசுபதி அம்மாள் கையால் 32,240 ரூபாய் மற்றும் அடையாள அட்டைகள் இருந்த பணப்பையை அப்பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

தனது கடையில் வாடிக்கையாளர் தொலைத்த பணத்தை 15 நாட்கள் காத்திருந்து திருப்பி உரியவரிடம் பணத்தை கொடுத்த மூதாட்டி பசுபதி அம்மாளின் நேர்மையை பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களை தெரிவித்தார். மூதாட்டி பசுபதி அம்மாளின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.