உள்ளூரில் இருந்து உலகச் சந்தைக்கு செல்லும் ஒடிசா காய்கறிகள் - சாதனை படைக்கும் விவசாயிகள்!
ஒடிசாவில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கடந்த ஓராண்டில் 352.58 மெட்ரிக் டன் தோட்டக்கலைப் பொருட்கள் ரூ. 572 கோடிக்கு 11 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Published : September 22, 2026 at 7:59 AM IST
புவனேஸ்வரம்: ஒடிசாவை சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள், எஃப்பிஓ என அழைக்கப்படும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் முறையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவோடு, தங்களது விளைபொருட்களை இந்தியாவின் எல்லைகளை தாண்டி உலகளாவிய சந்தைகளில் வெற்றிகரமாக விற்பனை செய்து சாதனை படைத்து வருகின்றனர்.
ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் விளையும் உயர்தர காய்கறிகள், சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய நறுமணப் பொருட்கள் தற்போது துபாய், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
முன்னதாக உள்ளூர் சந்தைகளில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வந்த பொருட்கள், தற்போது உலகளாவிய விற்பனையாளர்களின் கைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தேன்கனாலை சேர்ந்த விவசாயி பாரிக் கூறுகையில், "பல தலைமுறைகளாக விவசாயம் என் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அது எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை தந்தது" என்றார்.
பாரிக்கை போலவே, தேன்கனாலை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான விவசாயிகள், உள்ளூர் வாங்குபவர்களைச் சார்ந்திருந்த நிலையிலிருந்து, ஏற்றுமதி நிலைக்கு மாறியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் என்பது மாம்பழங்களை வெளிநாடுகளுக்கு விற்பது மட்டுமல்ல, அவர்கள் விவசாயம் செய்து வந்த முறையையே மாற்றி அமைத்தது.
"எங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை மட்டுமல்லாமல் உலகளாவிய அங்கீகாரம் இதன் மூலம் கிடைத்தது. சிறு விவசாயிகள் கூட தங்கள் விளைபொருட்களை உலக அளவில் விற்பனை செய்வதற்கான வழிகாட்டுதல் கிடைத்தன" என்றும் பாரிக் சுட்டிக்காட்டினார்.
உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, விவசாயிகளை ஒன்றிணைத்து பெரிய அளவிலான உற்பத்தியை சாத்தியமாக்கியதுடன், சர்வதேச தர கட்டுப்பாடுகளை பின்பற்றுவதற்கான பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உலக சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக, ஒடிசா முழுவதிலும் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் கடந்த ஓராண்டில் 352.58 மெட்ரிக் டன் தோட்டக்கலைப் பொருட்கள் ரூ. 572 கோடிக்கு 11 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வெறும் மூன்று பருவங்களில் ஏற்றுமதியின் வளர்ச்சி அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது. 2024-25ல் 39.48 மெட்ரிக் டன்னாக இருந்த ஏற்றுமதி, 2025-26ல் 140.31 மெட்ரிக் டன்னாக அதிகரித்து, தற்போது நடைபெற்று வரும் 2026-27 பருவத்தில் ஏற்கனவே 172.805 மெட்ரிக் டன்னைத் தொட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய வேளாண் அமைச்சரும், துணை முதலமைச்சருமான கே.வி. சிங் தியோ, "விவசாயிகள் நல்ல வருமானம் பெற ஏற்றுமதி ஒரு முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளது. ஒடிசாவின் மாம்பழங்கள் மற்றும் பிற விளைபொருட்களுக்கு ஒரு தனித்துவமான உலகளாவிய அடையாளம் தற்போது கிடைத்துள்ளது" என்றார்.
விவசாயிகளின் இந்த உலகளாவிய வளர்ச்சிக்குத் தூணாக இருக்கும் எஃப்பிஓ-க்களின் திறனை மேம்படுத்த ஒடிசா மாநில அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்கவும், நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கவும் மாநிலம் முழுவதும் ரூ. 252 கோடி மதிப்பீட்டில் நவீன குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் வேளாண் பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அறிவியல்பூர்வமான பேக்கேஜிங் மற்றும் முறையான ஆவணப்படுத்துதல் போன்றவற்றுக்கு அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள், சிறு விவசாயிகளும் எளிதாக ஏற்றுமதியாளர்களாக மாற வழிவகுத்துள்ளன.
இந்த சர்வதேச வர்த்தகப் புரட்சியில் ஒடிசாவின் பெண் விவசாயிகளின் பங்களிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பல எஃப்பிஓ-க்கள் பெண்களால் முழுமையாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் கூட்டு ஆளுமை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சர்வதேச நிறுவனங்களுடன் நேரடியாக பேசி வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளிலேயே 343-ல் இருந்து 1,789-ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்படி பயன் அடைந்தவர்களில் கிட்டத்தட்ட 63 சதவீதம் பேர் பெண்கள். 72 சதவீத உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை பெண்களே நிர்வகித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சபுஜா சனாதனபாலி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த விவசாயி சங்கஜினி கூறுகையில், "முன்பு, நான் எனது பண்ணை விளைபொருட்களை உள்ளூர் சந்தையில் விற்று வந்தேன். ஆனால், உழவர் உற்பத்தியாளர் அமைப்பில் இணைந்தது, விவசாயம் குறித்த எனது புரிதலை மாற்றியது. நான் அறிவியல்பூர்வமான விவசாய முறைகள், டிஜிட்டல் ஆலோசனைகள், சிறந்த அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் வாங்குபவர்கள் தொடர்பான பிற அம்சங்களைக் கற்றுக் கொண்டேன். மிக முக்கியமாக, நாங்கள் செல்வே முடியாது என்று கருதிய வெளிநாட்டு சந்தைகளுக்கு எங்களை கொண்டு சேர்த்தது" என்றார்.
"தற்போது எங்கள் விளைச்சலுக்கு நல்ல விலை கிடைப்பதால், அது என் குடும்பத்தின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தி, விவசாயத்தை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ள எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. மற்ற பெண் விவசாயிகளையும் முன்வந்து வெற்றியைச் சுவைக்க நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
இது கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், அவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தையும் பெற்றுத் தந்துள்ளது. இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விடுபட்டு, நவீன தொழில்நுட்பம் மற்றும் எஃப்பிஓ-க்களின் துணையோடு ஒடிசா விவசாயிகள் உலகச் சந்தையை ஆள்வது, இந்திய வேளாண் துறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

