தோசையால் ஏற்பட்ட வினை.. கடை உரிமையாளரை தாக்கிய நபர்கள்.. மயிலாடுதுறை அருகே பரபரப்பு! - hotel owner attacked by youth

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 10:05 PM IST

thumbnail
ஹோட்டல் உரிமையாளர் தாக்கப்படும் சிசிடிவி காட்சி (credit - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, திருவாலங்காடு பகுதியில் உள்ள கடைவீதியில் கௌதமன் சுமார் ஓராண்டுக்கும் மேலாக அசைவ உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 9ஆம் தேதி இரவு இவரது கடைக்கு 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்துள்ளனர்.

அவர்கள் எண்ணெய் ஊற்றாமல் தோசை வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், கடை ஊழியர் தோசையில் எண்ணெய் ஊற்றிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் அனைவரும் கடை உரிமையாளர் கௌதமனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின்னர், கடையில் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கடையின் உரிமையாளரைக் கௌதமனை இளைஞர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த கௌதமன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் கௌதமன் அளித்த புகாரின் அடிப்படையில், திருவாவடுதுறை பிள்ளையார் தோப்பு பகுதியைச் சேர்ந்த திவாகர், ராஜராஜன் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து குத்தாலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.‌ இந்த நிலையில், கடை உரிமையாளரை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.