அமைச்சர் உதயநிதி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பயனாளிகள் ஆத்திரம்.. கோவையில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 12:31 PM IST

thumbnail

கோயம்புத்தூர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவையில் (நேற்று பிப்.11) நடைபெற்றது. இந்த நிலையில், வீட்டு வசதி வாரியத்தின் கீழ், பணம் செலுத்திய நபர்களுக்கு பட்டா மற்றும் வீட்டின் சாவி வழங்கப்படும் எனக் கூறி ஏமாற்றியதாக, சுமார் 50க்கும் மேற்பட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

கோவை, சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்ததுடன், முடிவுற்ற திட்டங்களையும் துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மகளிர் சுய உதவிக் குழு உள்ளிட்ட ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளையும், பட்டா உள்ளிட்டவற்றையும் வழங்கினார்.  

இந்த நிலையில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பணம் செலுத்தியவர்களுக்கு பட்டா மற்றும் வீட்டின் சாவி ஆகியவை அமைச்சர் கையால் வழங்கப்படும் எனக் கூறி மேட்டுப்பாளையம் காரமடை பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர்களுக்கு பட்டா மற்றும் சாவி ஆகியவை வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இதனால் நிகழ்ச்சி நடந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அழைத்து வரும்பொழுது வாக்குறுதி கொடுத்து அழைத்து வந்த அதிகாரிகள், நிகழ்ச்சி முடிந்த பிறகு தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அங்கிருந்து புறப்பட்டு விட்டதாகவும், விழாவிற்கு வந்த சம்பந்தப்பட்ட மக்கள் குற்றம் சாட்டினர். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.