குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.. இரண்டு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு! - Bus hit man in Coimbatore

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 7:01 PM IST

thumbnail
கோவையில் ஏற்பட்ட விபத்து தொடர்பான காட்சிகள் (Credit - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக இருப்பது காந்திபுரம் நகர பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை காந்திபுரம் -காந்தி பார்க் இடையே இயக்கப்படும் தனியார் பேருந்து ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது, அந்தப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் திடீரென பேருந்தை பின்னோக்கி நகர்த்தியுள்ளார். அப்போது பின்னால் இருந்த பேருந்தை கடந்து செல்ல முயன்ற ஒருவர், இரு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காட்டூர் போக்குவரத்து போலீசார், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த திருநாவுக்கரசர் என்பதும், மதுபோதையில் இந்த விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் மீது 279 மற்றும் 304 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், இந்த விபத்தில் உயிரிழந்த நபர் நீலகிரி மாவட்டம், தெங்கு மரஹாடா கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.