ETV Bharat / state

கனிமவளக் கொள்ளைக்கு எதிரான நடவடிக்கை - தமிழக அரசு ஏன் தயங்குகிறது? - தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 5:03 PM IST

Illegal mining at Coimbatore: கனிமவளக் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் தயக்கம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஏன் தயங்குகிறது

கோயம்புத்தூர்: தடாகம் பகுதியில் சட்டவிரோத செங்கல் சூளைகளால் ரூபாய் 373 கோடி அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து 6 மாதங்களில் குழு அமைத்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் அரசாங்கம் அலட்சியம் காட்டி வந்தது.

இந்நிலையில், இன்று (மார்ச்.14) இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை, மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம் பகுதியில் சட்டவிரோதமாகக் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரைக் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்த குழு சட்டவிரோத செங்கல் சூளைகளால் 373 கோடி ரூபாய் அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டது. இதையடுத்து சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கு 59 கோடி ரூபாய் அபராதம் விதித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

அபராத உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு 6 மாதங்களில் குழு அமைத்து மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதற்கிடையில் சட்ட விரோத செங்கல் சூளைகளை மூட கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்த கனிம வளத்துறை ஆணையர், 13 கோடி ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் செங்கல் சூளைகளை நடத்த அனுமதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்.14) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், தமிழக அரசு கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறது? மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியது.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஏன் இன்னும் குழு அமைத்து ஆய்வு செய்யவில்லை? குழு அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை மே.28ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக் வழக்கை கையில் எடுக்கிறதா டெல்லி என்ஐஏ?.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.