யார் இந்த செல்வப்பெருந்தகை? - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக உயர்ந்தது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 10:04 AM IST

selvaperunthagai

K. Selvaperunthagai: கடும் போட்டிக்கு மத்தியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதையைக் காணலாம்.

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, கடும் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாநிலத் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை நேற்று காங்கிரஸ் தலைமை வெளியிட்டிருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிற நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றம் அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது எனலாம்.

யார் இந்த செல்வப்பெருந்தகை? சென்னை அருகே உள்ள படப்பை - மணிமங்கலத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கு.செல்வப்பெருந்தகை. சட்டப் படிப்பை சரிவர முடித்து, சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியில் 16 ஆண்டுகள் பணியாற்றினார். ஆனால், பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில், தனது வங்கிப் பணியை விடுத்து அரசியல் வாழ்வைத் தேர்ந்தெடுத்தார்.

மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியில் இணைந்ததன் மூலம், இவரின் அரசியல் பயணம் தொடங்கியது. பின்னர் 2001 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்த படியான பொதுச் செயலாளர் என்னும் முக்கிய பதவியிலும், விசிக சட்டமன்ற குழுத் தலைவராகவும் செயல்பட்ட இவர், திருமாவளவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர், பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஆனார். இந்நிலையில், 2010ஆம் ஆண்டு ராகுல் காந்தியைச் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். அப்போது, அவருக்கு காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

2011ஆம் ஆண்டு செங்கம் தொகுதியிலும், 2016ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தான் தோல்வியுற்ற ஸ்ரீபெரும்புதூர் தொகுதியியேலே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், தமிழக சட்டசபையின் பொதுக் கணக்கு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இளையபெருமாள், மரகதம் சந்திரசேகரைத் தொடர்ந்து, தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, செல்வப்பெருந்தகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், "இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு வாழ்த்துகள்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சிறப்பாக வழிநடத்தி, வெற்றிகள் பல குவித்திட்ட கே.எஸ்.அழகிரியின் எதிர்காலப் பணிகள் சிறக்கவும், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமாரின் செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.