ETV Bharat / state

"5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம்" - எப்போது துவக்கம்? - Thayumanavar scheme

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 3:20 PM IST

When will launched Thayumanavar scheme: வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுமார் 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம் தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் (Credits: M.K.Stalin twitter page)

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் முதல்வன் திட்டம் உள்பட பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், கடந்த 2024 பட்ஜெட் தொடரின் போது தமிழ்நாட்டில் வறுமையைக் குறைக்கும் விதமாக முதலமைச்சரின் 'தாயுமானவர் திட்டம்' (Thayumanavar scheme) தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2024 - 25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த திட்டத்திற்காக ரூ.27,922 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் ஏறக்குறைய 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை வறுமையில் இருந்து உயர்த்த இந்த திட்டம் உதவும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூக நல திட்டங்களால் வறுமையை குறைப்பதில் மிகச் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டு வந்தாலும், தாயுமானவர் திட்டம் மூலம் மிகவும் வாடிய நிலையில் வசிக்கும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றம் அடைய செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய அரசின் 'நிதி ஆயோக்' சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் சதவீதம் தமிழ்நாட்டில் 2.2 சதவீதம் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் வாடிய நிலையில் வாழும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, கல்வி, வேலை வாய்ப்பு திறன் மேம்பாடு வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் வழியாக மாநிலம் முழுவதும் மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பங்கள் கண்டறியப்பட உள்ளது. இத்திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பு உறுதி செய்யப்படும்.

அதுமட்டுமின்றி முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் ஏழை குடும்பங்களை எந்த அடிப்படையில் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பது பற்றி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, அதன் பிறகு இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் ஃபுளோரிடாவாக மாறும் தமிழ்நாடு! - விண்வெளி தொழிற்பூங்காவால் குலசை மக்களுக்கு என்ன பயன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.