ETV Bharat / state

3 வருடங்களில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான இளம் வயது கர்ப்பம்.. “யார் குற்றவாளிகள்?” அதிர்ச்சியூட்டும் தகவல்களுக்கு ஆர்வலர்களின் பதில் என்ன? - Teenage Pregnancy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 6:48 PM IST

Teenage Pregnancy: தமிழ்நாட்டில் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கர்ப்பமாக்குபவர்களும் குற்றவாளிகள் தான் எனவும், இளம் வயதில் குழந்தைகள் கர்ப்பமாகுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கோப்பு படம் மற்றும் வழக்கறிஞர் பிரபாகரன், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் புகைப்படம்
கோப்பு படம் மற்றும் வழக்கறிஞர் பிரபாகரன், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் புகைப்படம் (credit to ETV Bharat Tamil Nadu)

வழக்கறிஞர் பிரபாகர், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் பேட்டி (Video Credit to ETv Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டில் 18 வயதிற்கும் கீழ் கரோனா காலத்தில் 14 ஆயிரத்து 31 பேர் கர்ப்பமாகி உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 36 ஆயிரத்து 134 குழந்தைகள் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும், மாதம்தோறும் 800க்கும் மேற்பட்டவர்கள் கர்ப்பம் அடைந்து வருகின்றனர் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கர்ப்பம் அடையச் செய்தவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு இது குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட துறைகள் ஒன்றிணைந்து நடவடிக்கையை எடுக்க வேண்டும் என குழந்தை நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியச் சட்டப்படி, குழந்தை திருமணம் என்பது 18 வயதுக்குட்பட்ட பெண் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆண் செய்துகொள்ளும் திருமணம் ஆகும். பெரும்பாலான குழந்தை திருமணங்கள் இளம் பெண்களிடையே நடைபெறுகின்றன. அவர்களில் பலர் மோசமான சமூக - பொருளாதார நிலை மற்றும் விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கும், 18 வயதிற்குட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பொது சுகாதாரத்துறையின் கணக்கெடுப்பில், மாதம்தோறும் சுமார் 800க்கும் மேற்பட்ட பெண்கள் 18 வயதிற்கும் கீழ் கர்ப்பம் அடைகின்றனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை அளித்துள்ள பதிலில், "கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை 18 வயதிற்கும் கீழ் கர்ப்பம் அடைந்தவர்கள் விவரம் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது.

அதில், கடந்த 2021ஆம் ஆண்டில் ஜனவரியில் 1,031 பெண்களும், பிப்ரவரி 1,104, மார்ச் 1,495, ஏப்ரல் 1,221 பெண்களும், மே 1,087, ஜூன் 1,106, ஜூலை 1,179, ஆகஸ்ட் 1,145, செப்டம்பர் 1,232 பெண்களும், அக்டோபர் 1,129, நவம்பர் 1,087 மற்றும் டிசம்பரில் 1,215 பெண்களும் கர்ப்பம் அடைந்துள்ளனர்.

அதேபோல், கடந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் 978 பேரும், பிப்ரவரியில் 993, மார்ச் 1,030, மே 986, டிசம்பரில் 969 பேர் கர்ப்பம் அடைந்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டிலும் இதே நிலை நீடித்து, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 36 ஆயிரத்து 134 குழந்தைகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்கறிஞர் பிரபாகர், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 18 வயதிற்கும் கீழ் கர்ப்பம் அடைந்தவர்கள் விவரத்தை கடந்த 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை பொது சுகாதாரத்துறையில் கேட்டிருந்தோம்.

அதன் அடிப்படையில், 4 ஆண்டுகளில் 36 ஆயிரத்து 134 பேர் இளம் வயதில் கர்ப்பம் அடைந்த தகவல் அதிர்ச்சியாக உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் கரோனா காலத்தில் மக்கள் எளிதாக கோயில்களில் திருமணங்களைச் செய்தனர். அந்த காலகட்டத்தில், 14 ஆயிரத்து 31 பேர் கர்ப்பம் அடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டில் 10 ஆயிரத்து 901 பேரும், 2023ஆம் ஆண்டில் 9 ஆயிரத்து 565 பேரும் கர்ப்பம் அடைந்துள்ளனர். விடுமுறை காலங்களில் இளம் வயது திருமணம் மற்றும் கர்ப்பம் அதிகரித்து வருகிறது. இதில், இளம் வயது குழந்தைகள் வீட்டை விட்டு ஓடிவிட்டார்கள் என மட்டும் கூற முடியாது. பெற்றோர்களே விரும்பி திருமணத்தைச் செய்து வைக்கின்றனர்.

திருச்சியில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகளவில் எண்ணிக்கை உள்ளது. இளம் வயது கர்ப்பம் திருச்சி, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தடுக்க முடியும். அரசு தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே குறைக்க முடியும்.

மேலும், 18 வயதிற்குப்பட்டவர்கள் கர்ப்பம் அடைந்தால் போக்சோ சட்டத்தின் படி தவறாகும். அதன்படி, 36 ஆயிரம் போக்சோ வழக்குகள் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. எங்கு பாலியல் ரீதியான அத்துமீறல் நடைபெற்று வழக்கிற்குச் செல்லும்போது தான் போக்சோ வழக்காக மாறுகிறது.

அரசு மருத்துவமனைக்குச் செல்லும் போது அவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகளை முறையாகக் கொடுக்கின்றனர். ஆனால், அரசின் நலத்திட்டங்களைக் கொடுப்பதில்லை. 18 வயதிற்கு கீழ் யாருக்கும் பாலியல் ரீதியான தகவல் வந்தால் சட்டப்படி தவறாகும்.

இவர்களை அரசு மருத்துவர் பரிசோதித்த உடன் காவல்நிலையத்திற்கு முறைப்படி தகவல் கொடுக்க வேண்டும். ஆனால், அரசு மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளிப்பது இல்லை. அவர்களுக்கு சிகிச்சை அளித்து அனுப்பி விடுகின்றனர். பாலியல் ரீதியாக பிரச்னை வரும் இடங்களில் மட்டுமே போக்சோ வழக்காக மாறுகிறது.

2 பேரும் சம்மதித்து உடலுறவு கொண்டாலும் தவறாகும். அதுவும் போக்சோ வழக்கிற்குக் கீழே வரும். மேலும், பொது சுகாதாரத்துறை 18 வயதிற்கும் கீழ் கர்ப்பம் அடைந்தவர்கள் குறித்த விவரங்களை காவல்துறைக்கு அளிக்க வேண்டியது மருத்துவத்துறையில் பணியாற்றி வருபவர்களின் கடமையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் ஈடிவி பாரத்திடம் பேசியபோது, "18 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் கர்ப்பம் அடைந்தது மிகப்பெரிய ஆபத்தான, வருத்தத்திற்குரிய, குழந்தைகள் மீதான வன்முறையாகப் பார்க்கிறேன். குழந்தைகள் மீது நடைபெறும் வன்முறைகளை உடல் ரீதியாக வன்முறை, பாலியல் ரீதியாக வன்முறை, புறக்கணிப்பு வன்முறை, சாதி ரீதியான வன்முறை, தொழில்நுட்பம் சார்ந்த வன்முறை எனக் கூறுவார்கள்.

இவைகள் சார்ந்தது தான் பாலியல் ரீதியான விஷயம். இளம் வயது கர்ப்பம் என்பது மிகவும் ஆபத்தானது. வீட்டில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார் என நம்புகிறோம். ஆனால், இந்த தரவுகள் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை என்பதைக் கூறுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா காலம் பொது முடக்கக் காலம். அப்போது குழந்தைகள் மீது பாலியல் வன்முறை நடந்துள்ளது. குழந்தைகள் கர்ப்பம் அடைந்துள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்த மத்திய அரசின் ஆய்வு அறிக்கையில், "53 சதவீதம் குழந்தைகள் பாலியல் வன்முறை செய்யப்படுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இன்று எவ்வளவு என்பது தெரியவில்லை.

குழந்தைக்கு நன்கு அறிமுகமானவர்கள் தான் 95 முதல் 98 சதவீதம் பாலியல் வன்முறை செய்கின்றனர் எனக் கூறுகின்றனர். அதில், கூறுவது போல் தான் சுகாதாரத்துறையின் தரவுகளும் கூறுகிறது. தேசிய குற்றவியல் ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும் போக்சோ குறித்து அறிக்கை கொடுக்கின்றனர்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைக் கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைக்கு நன்கு அறிமுகமானவர்கள் தான் 99.4 சதவீதம் செய்கின்றனர் எனக் கூறியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேல் நடந்துள்ளது என்பது மிகப்பெரிய வன்முறை.

எனவே, 36 ஆயிரம் வழக்குகளும் பாலியல் வன்முறை தான் எனப் பார்க்க வேண்டும். வளர் இளம் பெண்கள் கர்ப்பம் அடைந்தாலும், மருத்துவ அறத்தின் படி சிகிச்சை அளிக்க வேண்டும். போக்சோ சட்டத்தின் படி ஒருவருக்கு பாலியல் வன்முறை நடைபெற்றுள்ளது என்பது தெரிந்தும் தகவல் அளிக்காதவர்களும் குற்றவாளிதான்.

பேறு கால சிகிச்சை அளித்த மருத்துவர்களும் குற்றவாளிகள் தான் எனச் சட்டம் கூறுகிறது. இந்த புரிதலுடன் பார்த்தால் சரியாக இருக்கும். அப்போது தான் புரியும். 18 வயதிற்குக் கீழ் நடக்கும் குற்றம் அவர் செய்த குற்றம் அல்ல. அது சூழல் தான். அந்தக் குழந்தைக்கு பாலியல் வன்முறை நடந்திருந்தால், அதனைச் சார்ந்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிதான்.

விரும்பி திருமணம் செய்திருந்தாலும், கட்டாய திருமணம், வரதட்சணை காரணம் போன்றவற்றிற்காக திருமணம் செய்தாலும் குற்றம் தான். பொது சுகாதாரத்துறை இளம்பெண்கள் கர்ப்பம் அடைந்த பின்னர் கருக்கலைப்பு செய்துவிட்டேன் என ஒதுங்கி விடுகின்றனர்.

உச்ச நீதிமன்றம் பாலியல் வன்முறை நடைபெற்றால் 30 வாரம் வரையில் கருக்கலைப்பு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு செய்யலாம். அவரே ஒரு குழந்தையாக இருக்கும் போது இன்னொரு குழந்தையைப் பெற்று எடுத்தால், முழு ஆரோக்கியமாகப் பெற்று எடுக்க முடியாது. குழந்தையின் தாய்க்கு ஆபத்து இருக்கிறது என்பதால் செய்யலாம் என இருக்கிறது.

18 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தையை பாலியல் வன்முறை செய்யும் போது போக்சோ சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். கடந்த 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் குழந்தை பருவத்தில் கர்ப்பம் அடைந்தவர்கள் எண்ணிக்கை வந்துவிட்டது. ஆனால் போக்சோவில் 14 ஆயிரம் வழக்குகள் தான் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 16 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யவில்லை அதெல்லாம் என்ன ஆனது?

சட்டப்படி இது போன்ற தகவலை காவல்துறைக்கோ, சைல்டு லைன் 1098, மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் அளித்திருக்க வேண்டும். குறிப்பாக, அரசு அலுவலர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். குழந்தை உரிமை செயற்பாட்டாளராகப் பார்க்கும் போது, அரசின் திட்டங்களை பாராட்டுகிறேன்.

பல்வேறு திட்டங்களைச் செய்து வரும் தமிழ்நாட்டில் இது போன்று நடைபெறுகிறதே என்ற ஆதங்கம் தான் உள்ளது. அரசுத் துறைகள் நடந்து முடிந்த பின்னர் தான் செல்கின்றனர். வளர் இளம் குழந்தைப் பருவத்தில் கர்ப்பம் அடைவதைத் தடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்டா மாவட்டத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை! - Muslims Special Pray For Rain

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.