ETV Bharat / state

டிராக்டரில் உணவு தேடிய காட்டு யானை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்! - Elephant search food video

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 10:39 PM IST

Elephant Searching food on tractor: கோவையில் காட்டு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து, டிராக்டரில் உணவு தேடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டிராக்டரில் உணவு தேடும் யானையின் சிசிடிவி புகைப்படம்
டிராக்டரில் உணவு தேடும் யானையின் சிசிடிவி புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

டிராக்டரில் உணவு தேடும் யானையின் சிசிடிவி காட்சிகள் (credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான ஆனைக்கட்டி, தடாகம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, வீரபாண்டி, தடாகம், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், இன்று பாப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள குணசேகரன் என்பவரது தோட்டத்திற்குள் ஆண் யானை ஒன்று புகுந்து, வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து உணவு தேடி உள்ளது. மேலும், அங்கிருந்த அரிசி மூட்டையைத் தூக்கி வீசி சேதப்படுத்தி உள்ளது.

தொடர்ந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரிலும் ஏதாவது உணவு இருக்குமா எனத் தேடியது. உணவு கிடைக்காததால் அங்கிருந்து சென்று விட்டது. யானையின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, காட்டு யானை இருப்பதைக் கண்டு வீட்டிற்குள்ளே இருந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்து வெளியேறிய யானை, முத்துக்குமார் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த மக்காச்சோளத்தைச் சாப்பிட்டுள்ளது. இதனையடுத்து, நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த முத்துக்குமார் குடும்பத்தினர், யானை நிற்பதை பார்த்து அங்கேயே நின்றுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,"கோடை காலத்தில் வனப்பகுதியில் முற்றிலும் வறட்சி நிலவுவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி நாள்தோறும் யானைகள் தங்களுடைய கிராமத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. மழைப்பொழிவு குறைவானதால் மிகக் குறைந்த அளவிலேயே விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், அதனையும் யானைகள் சேதப்படுத்துகிறது.

மாலை நேரங்களில் வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியே வரும் போதே மீண்டும் வனத்திற்குள் திருப்பி அனுப்ப முயற்சி எடுக்க வேண்டும். யானைகளால் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் பாஜக பிரமுகர் வீட்டில் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை! - Annur BJP Executive Money Theft

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.