ETV Bharat / state

"கூட்டணி அமைக்க முடியாதவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது" - திருமாவளவன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 5:32 PM IST

திருமாவளவன்
கூட்டணி அமைக்க முடியாதவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது

VCK Thirumavalavan: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் அதிமுகவும், பாஜவும் கூட்டணி அமைக்க முடியாமல் உள்ளது. கூட்டணி அமையாமலேயே பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார்கள். என்ன முயற்சி செய்தாலும் கூட்டணியே அமைக்க முடியாதவர்களால் இங்கே வெற்றி பெற வாய்ப்பில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமாக 7 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் மற்றும் ஜூன் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் அதிமுகவும், பாஜவும் கூட்டணி அமைக்க முடியாமல் உள்ளது. என்ன முயற்சி செய்தாலும் கூட்டணியே அமைக்க முடியாதவர்களால் இங்கு வெற்றி பெற வாய்ப்பில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் நிறைவு விழா மும்பையில் நடந்தது. முதற்கட்ட பயணத்தை, கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடித்தார். 2வது கட்ட பயணத்தை மணிப்பூரில் தொடங்கி மும்பையில் நிறைவு செய்தார். இந்திய அரசியல் வரலாற்றில் ராகுல்காந்தியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

சீனாவில் மாசே துங் பயணம் கலாச்சார மாற்றத்திற்கு வழிவகுத்தது. அதன் பிறகு ஒரு அரசியல் தலைவர் நீண்ட தூரம் பயணம் செய்தது ராகுல்காந்தி தான். இந்த பயணத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பல்வேறு மக்களைச் சந்தித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் கட்சியை வளர்க்காமல், பாசிச கும்பலிடம் இருந்து நாட்டையும், மக்களையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் வெற்றிகரமாகப் பயணத்தை நடத்தி முடித்துள்ளார்.

இந்த பயணம் மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய இளைய தலைமுறையினர் ராகுல்காந்தியைச் சந்திக்கவும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அமைதியான புரட்சியை நடத்த இருக்கிறார்கள். பாஜக சங்கப்பரிவார் அமைப்புகள் சூது, சூழ்ச்சி செய்தாலும் அனைத்தையும் முறியடித்து, ஆட்சி பீடத்திலிருந்து அவர்களை மக்கள் அப்புறப்படுத்துவார்கள்.

ஒரு வருடமாக பல்வேறு முயற்சிகள் செய்தாலும் கட்சிகளைப் பிடிக்காமல் கூட்டணி அமைக்க முடியவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் அதிமுகவும், பாஜவும் கூட்டணி அமைக்க முடியாமல் உள்ளது. பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வந்து போகிறார். கூட்டணி அமையாமலேயே பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார். என்ன முயற்சி செய்தாலும் கூட்டணியே அமைக்க முடியாதவர்களால் இங்கே வெற்றி பெற வாய்ப்பில்லை.

அசாம், திரிபுரா உள்பட வடகிழக்கு மாநிலங்களில் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகத் தேர்தல் நேரத்தில் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த பாஜக முன் வந்துள்ளது. இவை பாஜகவிற்கு எதிராகத் தான் போய் முடியும்.

தமிழகத்தில் 40 தொகுதிகள் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிராவில் 48 தொகுதிகள் உள்ளது. ஆனால், 5 கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் ஆணையம் அரசியல் தலையீட்டிற்கு ஆட்பட்டு இருப்பது தெரிகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்று விடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி இவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக கொடி, இரட்டை இலை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை - சென்னை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.