"ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் விடுமுறை" - வானதி சீனிவாசன் கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 20, 2024, 4:54 PM IST

Vanathi Srinivasan said TN government need to announced a holiday in for Ram temple Kumbabishekam

Vanathi Srinivasan: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

வானதி சீனிவாசன் பேட்டி

கோயம்புத்தூர்: கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பாஜக சின்னத்தை சுவற்றில் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஐந்து இடத்திலாவது பாஜகவின் சின்னமான தாமரையை வரைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் வரைந்து வருகின்றனர். கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் என்கிற வகையில் இன்று இந்த பணிகளை துவக்கி வைத்துள்ளேன்.

தமிழகத்தில் இன்றும் (ஜன. 20), நாளையும் (ஜன. 21) பல்வேறு கோயில்களில் பிரதமர் வழிபாடு செய்கிறார். ராமருக்கும் தமிழகத்திற்கும் பாரம்பரியம் மிக்க, கலாச்சார ரீதியான இணைப்பு உள்ளது. இங்கு வழிபாடு செய்து அயோத்திக்கு பிரதமர் செல்வது தமிழகத்திற்கு பெருமை அளிப்பதாகும். அரசு நிகழ்ச்சிகளில் பிரதமரும், முதலமைச்சரும் கலந்து கொள்வது இயல்புதான் அதை கூட்டணி என பார்க்க முடியாது.

மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேவையான தொகையை உடனடியாக பிரதமர் கொடுத்துள்ளார். தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி, கொடுக்க வேண்டிய அக்கறை இவை இரண்டையும் பிரதமர் கொடுத்துள்ளார். மேலும், ராமர் கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி தான் உரிய பணிகளை செய்தது. அனைத்தையும் தேர்தலோடு தொடர்பு படுத்த முடியாது.

நாட்டில் எப்போதும் ஏதாவது தேர்தல் நடந்து கொண்டு தான் இருக்கும். மேலும், ராமர் கும்பாபிஷேக விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளிப்பது போல தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும். திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பட்டியல் இனப்பெண் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சி எம்எல்ஏ என்பதால் விட்டு விடாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கத்தில் பிரதமர் மோடி.. இந்தியில் சாலையில் வாசகம் எழுதி வரவேற்ற அறக்கட்டளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.