ETV Bharat / state

"தமிழக பட்ஜெட்டில் நிறைந்திருப்பது மத்திய அரசின் திட்டங்கள்.. புதிதாக ஒன்றும் இல்லை" - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 7:52 PM IST

Vanathi srinivasan on TN Budget: மத்திய அரசின் திட்டங்களின் பெயர் மாற்றி தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டப்பேரவை துணைத்தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Vanathi srinivasan
வானதி சீனிவாசன்

"பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை.. தமிழ்நாடு பட்ஜெட்டில் நிறைந்திருக்கும் மத்திய அரசின் திட்டங்கள்" - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25 ஆம் ஆண்டிற்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப்.19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது குறித்து பாஜக சட்டப்பேரவை துணைத்தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில், "அமைச்சர் அவருக்கே உரித்தான தமிழ் நடையோடு தடையின்றி படித்தார். அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. 2019ஆம் ஆண்டு மத்திய அரசின் 'நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்', 'ஆவாஸ் யோஜனா திட்டம்' ஆகிய திட்டங்களை மாற்றி கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளனர்.

மத்திய அரசுத் திட்டங்களில் இருக்கும் அதே மாதிரியான திட்டங்களை வைத்துக்கொண்டு, அந்த நிதி உதவியோடு செயல்படுத்தும் திட்டங்களுக்கு புதிய பெயர் கொடுத்துள்ளனர். அடையாறு ஆற்றின் தூய்மை பணிகள் குறித்து முதலமைச்சரின் தந்தை காலத்திலிருந்தே அறிவிப்பாகத் தான் உள்ளது. உலக பொருளாதார நிபுணர்களுக்கு அரசு கொடுத்த தொகை எவ்வளவு என்பதைத் தெரிவிக்க வேண்டும். நிதிநிலை மோசம் அடையாமல் இருப்பதற்காகவே மாநிலங்களுக்கான கடன் தொகையை நிர்ணயித்துள்ளது மத்திய அரசு.

மின் பகிர்மான கழகத்தினுடைய இழப்பு, போக்குவரத்து இழப்பு வரி வருவாய் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இல்லாமல் இருப்பதனால் தான், பற்றாக்குறை நிதி வெளியிட்டது இவர்களின் மேலாண்மை காரணம் மட்டும் தான். சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகள் போல் பொருளாதாரத்துக்கு இணையானது தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்று பிதற்றிக்கொள்ளும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே அளிக்கிறது. அதிகளவில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கின்றனர். இதற்கான முக்கிய காரணம் என்ன? மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முறை கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் ஓராண்டுக்குப் பிறகு, தற்போது திட்ட அறிக்கையை வெளியிடுகிறோம் எனத் தெரிவிக்கின்றனர். இதற்குப் பிறகு எப்போது மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரியவில்லை. கோவை விளாங்குறிச்சி பகுதியில் முன்னதாக கட்டப்பட்டு வருகின்ற டைடல் பூங்காவை ஏதோ புதிதாகத் திறக்கப்படுவது போல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் பார்க்கும்போது இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகளவில் கடன் வாங்கிய மாநிலமாகவும், முதல் பட்ஜெட்டின் போது உலகில் சிறந்த பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட திமுக தற்போது அதன் மூன்றாவது பட்ஜெட்டில் இவ்வாறு நிதிப்பற்றாக்குறையுடன் கொடுப்பது என்பது, பொருளாதார நிபுணர்களுக்கு வழங்கப்பட்ட நிதி எவ்வளவு என்ற கேள்வியையும், வல்லுநர்களின் ஆலோசனையை திமுக பின்பற்றவில்லையா என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றது.

'விஸ்வகர்மா திட்டத்தை' வேறு பேரில் செயல்படுத்துகின்றனர். இந்த நிதிநிலையில் மத்திய அரசுக்கு எதிரான மனப்போக்கைத் தான் பார்க்க முடிகிறது. ஜிஎஸ்டி தொகையைத் தராவிட்டாலும், நீண்டகால கடன் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒரு சில திட்டங்களுக்கு புதிய பெயர்களைக் கொடுத்து, இறுதியாக வருவாய் பெருக்கத்தினை அதிகரிக்க முடியாமல் மத்திய அரசு மேல் பழி போடுவதாகத் தான் இந்த நிதிநிலை அறிக்கையைப் பார்க்க முடிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் அதிகளவில் கடன் பெற்றுள்ளது. தமிழ்நாடு, வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும் கூட பற்றாக்குறையான நிதி நிலை அறிக்கையாகவே உள்ளது. இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.20,198 கோடி ஒதுக்கீடு.. முழு விவரம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.