ETV Bharat / state

தமிழகத்தில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் - வானதி சீனிவாசன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 2:18 PM IST

Updated : Feb 10, 2024, 7:01 AM IST

Vanathi Srinivasan: பாஜக புறக்கணிக்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து வருவதாகவும், தமிழகத்தில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Vanathi Srinivasan has said that BJP has a high chance of winning in Tamil Nadu
தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

கோயம்புத்தூர்: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி, கோவை வெரைட்டி ஹால் சி.எம்.சி காலணி பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சி.எம்.சி காலணியில் நீண்ட நாட்களாக இருந்த தண்ணீர் பிரச்னைக்கு போர்வெல் அமைத்து தீர்வு காணப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சியில் தரமான சாலைகள் போடப்படுவதில்லை. பணிகள் நடக்கும் இடங்களில், மாநகராட்சி நிர்வாகம் பணிகள் குறித்த முழுமையான விவரம், அந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாநகராட்சி முறையாக குப்பை எடுக்காததால், குப்பைகள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. இதனை உடனடியாக மேம்படுத்த வேண்டும். மாநகராட்சி மேயர் இதில் கவனம் செலுத்துகிறாரா என்பது தெரியவில்லை.

இதனால் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாநகராட்சி மாறி வருகிறது. இது தொடர்பாக சட்டமன்றக் கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம். அதன் பின்னரும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், போராட்டம் நடத்துவோம். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்கிறது. இதனால் நிலம் எடுத்தும், மத்திய அரசினால் பணிகளைத் துவக்க முடியவில்லை.

பின்தங்கிய மாநிலங்கள் கூட தமிழகத்தை முந்திச் செல்கின்றன. விமான நிலைய விரிவாக்கம் செய்யாததால், வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியா கூட்டணி மீண்டும் யுபிஏ-ஆக மாறி வருகிறது. பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை அளித்துள்ளார்.

எல்லா மாநிலங்களுக்கும் முறையாக மத்திய அரசு, வரி வருவாயைப் பகிர்ந்து அளித்து வருகிறது. தமிழகத்திற்கு நிதி குறைவாக கொடுக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களை விட, அதிக நிதி தமிழகத்திற்குத்தான் தரப்படுகிறது. கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகள்தான் தமிழகத்திற்கு அதிக வருமானம் தருகிறது. அதனால் அந்த வரி வருவாயை‌ முழுமையாக கொங்கு பகுதிக்கே திருப்பித் தாருங்கள் என கேட்க முடியும்.

உத்தரகாண்டில் தேர்தல் வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை, பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் சட்டம். மதபாகுபாடு இல்லாமல் பெண்களுக்கு சொத்து, திருமணம் போன்றவற்றில் நீதி கிடைக்க இந்த சட்டம் வழிவகை செய்யும். பெண்கள் பாதுகாப்பிற்கு பொது சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும். ஒரு கட்சியை அழித்து, ஒரு கட்சி வளர வேண்டும் என பாஜக நினைக்காது.

ஒரு கட்சியை வளர்ப்பது என்பது, இன்னொரு கட்சியை அழிப்பது என பொருள் அல்ல. நான் தனிப்பட்ட தாக்குதல்களை ஒத்துக் கொள்வதில்லை. யார் எல்லாம் கட்சியில் சேர விரும்புகிறார்களோ, அவர்களை கட்சியில் சேர்க்கிறோம். அதிமுக தலைவர்கள் பாஜகவினரை கடுமையாக விமர்சிக்கக் கூடாது. கருத்துக்கணிப்புகள் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்கிறது என்பதை காட்டுகின்றன. பாஜக புறக்கணிக்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து வருகிறது.

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர விரும்பும் கட்சிகளையும், தனிநபர்களையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். பிரதமர் மோடியை எதிர்த்தவர்கள் எல்லாம், தற்போது கூட்டணியில் இணைந்து வருகின்றனர். காஷ்மீர் முஸ்லீம் கட்சிகள், வடகிழக்கு மாநில கிறிஸ்தவ கட்சிகள் பாஜக கூட்டணியில் உள்ளன. கூட்டணியை முடிவு செய்ய 24 மணிநேரம் போதும். தமிழகத்தில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் சஸ்பெண்ட் - உயர் கல்வித்துறை நடவடிக்கை!

Last Updated : Feb 10, 2024, 7:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.